இயக்குநர் மிஷ்கின் நல்ல படைப்பாளியாக பல படங்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். அவரது படங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு விஷயத்தில், சமுதாயத்தின் தாக்கமாக இருக்கும். அது கேரக்டர்களின் வாயிலாக தானாக வெளிப்படும். அதே போல் மனதில் பட்டதை அப்படியே கரடுமுரடாக பேசி விடுபவர் மிஷ்கின்.
சமீபத்தில் கூட டெவில் பட விழாவில் பேசிய அவர், நடிகை பூர்ணாவின் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க வேண்டும். அவள் பிள்ளையாக நான் வளர வேண்டும் என்று பேசியதை பலரும் கடுமையாக விமர்சித்தனர். நெட்டிசன் சிலர் இதை மிகவும் கொச்சையாக விமர்சித்து இன்னும் அதை அசிங்கப்படுத்தினர். இப்படி எதையும் யோசிக்காமல் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வழக்கமாகி விட்டது.
அதே போல் துப்பறிவாளன் 2 படத்தை லண்டனில் எடுத்த போது மிஷ்கினுக்கும், நடிகர் விஷாலுக்கும் ஏற்பட்ட சண்டையால், அந்த படமே நின்று போனது. அந்த விஷயத்தில் நடிகர் விஷாலை ஒரு முன்னணி நடிகர் என்று பாராமல், பொதுவெளியில், மேடைகளில் இவர் மிக அசிங்கமாக திட்டியதும், ஒருமையில் பேசியதும் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசிய இயக்குநர் மிஷ்கின், லியோ படம் வெற்றி விழாவில் நான் விஜயை லெஜண்ட் என்று கூறியதை பலரும் கிண்லடித்தனர். ஆனால் விஜய் உயரம் அறிந்துதான் நான் அவரை லெஜண்ட் என்று குறிப்பிட்டேன். இதில் தவறாக எதுவும் நான் பேசிவிடவில்லை.
ஒரு நடிகனின் நடிப்பை பல ஆயிரம் பேர் விரும்புவார்கள். ஆனால் பல கோடி பேர் விஜயை நேசிக்கிறார்கள். அந்த இடத்துக்கு யாராலும் அவ்வளவு எளிதாக வந்துவிட முடியாது. அவர் கடுமையான உழைப்பாளி. ஒழுக்கமான நடிகர். அதனால்தான் அவரை நான் வெளிப்படையாக பாராட்டினேன்.
சித்திரம் பேசுதடி படம் பார்த்துவிட்டு, இந்த மாதிரி எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்று ஒருமுறை கேட்டார்.இந்த படமே விஜயை மனதில் வைத்து பண்ணியதுதான் என்றேன். உடனே என் சட்டையை பிடித்து இழுத்து, அப்புறம் ஏன் இப்படி செஞ்சீங்க என்று கேட்டார். நான் கதை சொன்னால், நீங்க மாத்தியிருப்பீங்க, உங்கப்பா தலையிட்டு கதையை மாத்தி இருப்பார். நான் நானாக இருந்திருக்க மாட்டேன். அந்த படம் நான் நினைத்த மாதிரி வந்திருக்காது என்ற உண்மையை சொன்னேன். அதை விஜய் உடனே புரிந்துக்கொண்டார் என கூறியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.





