டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. அதையொட்டி சென்னையில் மாணவர்கள் சார்பாக நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பேச வந்த நடிகை சனம் ஷெட்டி அங்கிருந்து மிகுந்த கோபமாக வெளியேறினார். அங்கு திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இருந்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சனம் ஷெட்டி அந்த போராட்ட அமைப்பாளர்களுக்கு எதிராக தனது ஆவேசமான கருத்துக்களை பதிவு செய்தார். அப்போது நடிகை சனம் ஷெட்டி கூறியதாவது, நீங்கள் சொல்லித்தான் நான் பேச வேண்டுமா? நான் என்ன உங்களுடைய பப்பட்டா? மாணவர்களுக்கான போராட்டம் என்று கூறி என்னை அழைத்தார்கள்.
மாணவர்களுக்காக பேசினால் போதும் என்று தான் கூப்பிட்டார்கள். அதை தான் நான் அங்கு செய்தேன். ஆனால் கூப்பிட்டு வந்துவிட்டு ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு வந்த என்னை ஜோக்கர் என்று சொல்கிறார்கள். நான் ஒரு படம் பார்த்தால் நான் ஜோக்கரா? வெற்றிமாறன் சார் இருக்கிறாரே? அவர் எத்தனை படங்களை எடுத்திருக்கிறார்.
அப்படியானால் அவரையும் சேர்த்து ஜோக்கர் என்று சொல்வீர்களா? ஜனநாயகத்திற்காக போராடுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் பேசிக் கொண்டிருக்கும் போதே மைக்கை பிடுங்குகிறார்கள். இதுதான் இவர்கள் பேசும் ஜனநாயகத்தின் லட்சணமா? நான் இங்கு பொதுமக்களில் ஒருவராக மாணவர்களுக்கு சப்போர்ட் செய்வதற்காக மட்டுமே வந்தேன்.
இந்த மேடையை அரசியல் அஜெண்டாவிற்கு பயன்படுத்தும் யாருக்கும் நான் சப்போர்ட் பண்ண முடியாது. 100 பேர் இருங்கள் அல்லது 1000 பேர் இருங்கள். மைக்கை பிடுங்கி என்னை அங்கிருந்து துரத்தி இருக்கிறார்கள். இதில் இருந்தே புரிகிறது. இவர்களின் ஜனநாயகத்தின் இலக்கணம். இவர்கள் ஜனநாயகத்திற்காக போராடவில்லை. ஏதோ ஒரு அஜெண்டாவை வைத்துக்கொண்டு தான் போராடுகிறார்கள்.
இவர்களின் சதிவலையில் மாணவர்கள் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். எனக்கு என்ன பேச தோன்றும் உரிமை இருக்கிறதோ அதைத்தான் பேசுவேன் என்று தான் வந்தேன். பேசக்கூட சுதந்திரம் கொடுக்காதவர்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்களா? இது முற்றிலும் ஒரு போலியான போராட்டம். டெல்லியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய 100 சதவீதமான ஆதரவு மாணவர்களுக்கு மட்டுமே உண்டு என்று நடிகை சனம் ஷெட்டி மிகவும் ஆவேசமாக கூறினார்.





