அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனர் மற்றும் நடிகர், அம்மா ஷோபா பின்னணி பாடகி, தாய் மாமா எஸ்என் சுரேந்தர் ஒரு பின்னணி பாடகர் மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் என சினிமா பின்புலம் நிறைந்த சூழலில் வளர்ந்தவர் நடிகர் விஜய். அவரை டாக்டர் ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எஸ்ஏசி – ஷோபா தம்பதிக்கு அவர் நடிகராக ஆசைப்பட்ட போது தடுக்க முடியவில்லை. பிறகு அப்பா எஸ்ஏ சந்திரசேகரே தனது மகன் விஜயை அறிமுகப்படுத்தி நாளைய தீர்ப்பு என்ற படத்தை இயக்கினார்.
ஆனால் விஜய்க்கு அந்த படம் பெரிய வெற்றியை தரவில்லை. தொடர்ந்து விஜயகாந்துக்கு தம்பியாக அவர் நடித்த செந்தூரப்பாண்டி படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து ரசிகன் தேவா ஆகிய படங்களில் காதல் ஆக்சன் கலந்த கதைகளில் விஜய் நடித்தார். அதன்பிறகு அவரது சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்த படம்தான் பூவே உனக்காக.
இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் மாஸ் ஹிட் படமாக அமைந்தது. நம்பியார் நாகேஷ் சங்கீதா அஞ்சு அரவிந்த் மலேசியா வாசுதேவன் ஜெய் கணேஷ் சக்தி சார்லி மதன்பாப் மீசை முருகேஷ் என பலர் நடித்த இந்த படம்தான் விஜய்க்கு சினிமாவில் பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது. பெண் ரசிகைகளும் அதிகளவில் விஜய் பக்கம் திரும்பினர்.
இந்த படத்தில் நடித்த நடிகை சங்கீதா கூறியதாவது, பூவே உனக்காக படத்தில் நான் நடித்த போது நல்ல கம்பர்டபிளாக இருந்தது. அந்த படத்தில் விஜயுடன் நடித்த போது அவரும் ரொம்ப அமைதியாக இருப்பார். நானும் செட்டில் பெருசாக எதுவும் பேசமாட்டேன். டேக் என்று சொன்னதும் நாங்கள் நடிக்க தொடங்கி விடுவோம்.
மற்ற நேரத்தில் எல்லாம் விஜய் அமைதியாக தான் இருப்பார். நான் அப்போது பூவே உனக்காக படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்தேன். அந்த விஷயம் விஜய்க்கு தெரிய வந்ததும் அவர், என்கிட்ட சொல்லவே இல்லையே என்று என்னிடம் கேட்டார். அதுபோல அவரும் அவரது வருங்கால மனைவி சங்கீதாவை காதலித்துக் கொண்டிருந்த விஷயத்தை என்னிடம் சொல்லி இருந்தார்.
ஆனால் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, விஜய் சங்கீதாவை காதலிக்கிறார் என்றதும் எங்கள் இருவரையும் இணைத்து பல செய்திகள் வந்தது. ஆனால் உண்மையில் அவர் காதலித்த சங்கீதா அவரது மனைவிதான். ஆனால் நானும் காதலித்தது உண்மைதான். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து பிறகு அவரையே நான் திருமணமும் செய்து கொண்டேன் என்று நடிகை சங்கீதா கூறி இருக்கிறார்.





