தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 1990களில் வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் என்ற படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பும் அழகும் குறிப்பாக நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் விஜய் அஜீத்குமார் கமல்ஹாசன் அர்ஜூன் சரத்குமார் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்தார். இதில் சிம்ரன் நாயகியாக நடித்த வாலி பிரியமானவளே பம்மல் கே சம்பந்தம் அவள் வருவாளா பஞ்ச தந்திரம் ஏழுமலை நட்புக்காக கண்ணெதிரே தோன்றினாள் அரசு ஒன்ஸ்மோர் என பல படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது.
நடிகர் ரஜினிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் சிம்ரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதான் ரஜினியுடன் அவர் நடித்த முதல் படமாகும். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அவரால் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்த முடிகிறது. விஜயுடன் அவர் ஆடிய ஆல்தோட்ட பூபதி நானடா பாடல் இன்றும் டிரண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் காலடி பதித்த சிம்ரன் சீமராஜா அந்தகன் போன்ற படங்களில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார். இப்போது நடிகர் சசிக்குமாருடன் அவர் ஜோடியாக நடித்த டூரிஸ்ட் பேமிலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சிம்ரன் கூறியதாவது, என்னிடம் பேசும் சிலர் ஏன் நீங்கள் இந்திக்கு செல்லவில்லை என்று கேட்கின்றனர். நான் தமிழில் இருந்து பாலிவுட் சினிமாவுக்கு சென்று நடிக்க வேண்டும். அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. அது எனக்கு தேவையும் இல்லை என்றுதான் சொல்லுவேன்.
தமிழ் சினிமா எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இதை என் வீடு என்பேன். இங்கு எனக்கு நிறைய சௌகரியம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பணியாற்றுவோர் மிகவும் எதார்த்தமாக இருக்கிறார்கள். பெரிய ஸ்டார் நடிகர்களாக இருந்தாலும் கூட தலைக்கனம் இல்லாமல் பரந்த மனப்பான்மையுடன் அவர்கள் நடந்து கொள்கின்றனர். அதுதான் எனக்கு ரொம்பவும் பிடித்த விஷயம் என்று நடிகர் சிம்ரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





