நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் சந்திரமுகி படம் மிக முக்கியமானது. கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படம் வெளியானது. சிவாஜி புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படத்தை பி வாசு டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்து இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சரவணன் என்ற கேரக்டரிலும் பிளாஷ்பேக்கில் வேட்டையன் என் கேரக்டரிலும் நடித்திருந்தார். பிரபு ஜோதிகா நயன்தாரா விஜயகுமார் நாசர் வடிவேலு செம்மீன் ஷீலா சோனு சூட் மாளவிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆனது.
சந்திரமுகி படம் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு கதையில் உருவாகி இருந்தது. மலையாளத்தில் மணிசித்ரதாழ் என்ற படத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. மலையாளத்தில் மோகன்லால் சுரேஷ்கோபி ஷோபனா உள்ளிட்டோர் நடித்த கேரக்டர்களில் தமிழில் ரஜினிகாந்த் பிரபு மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் கிளைமாக்ஸில் ஜோதிகா நடிப்பு மிரட்டலாக இருந்தது.
சந்திரமுகி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு கடந்த ஆண்டில் இயக்குனர் பி வாசு சந்திரமுகி 2 படத்தை இயக்கி இருந்தார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ரஜினிக்கு பதிலாக இந்த படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருந்தார். கங்கனா ரெனாவத் சிருஷ்டி டாங்கே லட்சுமிமேனன் ராதிகா வடிவேலு உள்ளிட்டோர் நடித்த சந்திரமுகி 2 படம் பலத்த தோல்வியை சந்தித்தது.
கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி படம் போல விறுவிறுப்பான கதையில் காட்சியமைப்பில் சந்திரமுகி 2 படம் அமையவில்லை. குறிப்பாக ஜோதிகாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட படமாக அது இருந்தது. சந்திரமுகியாக மாறிவிடும் கங்கா கேரக்டரில் ஜோதிகாவில் மருண்ட விழியும் கோபமும் ஆவேசமும் அந்த படத்தில் மிக அற்புதமாக இருந்தது. ஆனால் இந்த படம் அந்தளவுக்கு இல்லை.
இந்நிலையில் சந்திரமுகி படம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சிம்ரன் கூறியதாவது, சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டரில் நான் 3 நாட்கள் நடித்தேன். அதன்பிறகு தொடர்ந்து நடிக்க முடியாமல் அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன். அதற்கு காரணம் நான் அப்போது கர்ப்பமாக இருந்தேன். அதனால் அந்த கேரக்டரில் பிறகு நடிகை ஜோதிகா நடித்தார் என்று சிம்ரன் கூறியிருக்கிறார்.





