நடிகை கேஆர் விஜயா தான், தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக அழைக்கப்பட்டவர். அதற்கு பின் தமிழ் படங்களில் நடித்த எந்த நடிகைக்கும் கிடைக்காத அந்த பட்டப் பெயர் கடைசியில் நடிகை சினேகாவுக்கு தான் கிடைத்தது. புன்னகை அரசியாக ரசிகர்களை தன் சிரிப்பால் வசீகரித்தவர் சிநேகா தான்.
சுசி கணேஷ் இயக்கத்தில், விரும்புகிறேன் என்ற படத்தில் பிரசாந்த் ஜோடியாக சினேகா அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் ஜோடியாக நடித்தார். அடுத்து வசீகரா படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். இப்போது நீண்ட நாட்களுக்கு பின் கோட் படத்தில் மீண்டும் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.
ஆனந்தம், நான் அவன் இல்லை. பம்மல் கே சம்பந்தம், ஏப்ரல் மாதத்தில், போஸ், பார்த்திபன் கனவு, புதுப்பேட்டை, ஜனா என பல படங்களில் சினேகா நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதில் புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் சினேகா நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டில் நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு, அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது அவருக்கும், சினேகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2012ம் ஆண்டில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். ஒரு மகன், ஒரு மகள் இந்த தம்பதிக்கு உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு சினேகாவுக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லை. அதனால் டிவி சேனல்களில் நடக்கும் கேம் ஷோ, நடனம், பாட்டு போன்ற ரியாலிடி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். மிக அதிகமான விளம்பர படங்களில் சிநேகாவை காண முடிகிறது. ஏனெனில் நடுத்தர வயது அழகான அம்மா என்றால், அங்கு சினேகா வந்து விடுகிறார். பொங்கல், தீபாவளி என்றால், அழகான புடவைகளில் சினேகா விளம்பரங்களில் வந்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சினேகா புதியதாக ஜவுளிக்கடை ஒன்றை துவங்கியிருக்கிறார். இதன் திறப்பு விழா வரும் 12ம் தேதி நடக்கிறது. சினேகாலயா சில்க்ஸ் என்ற இந்த ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்துக்கொள்ளுமாறு, தனது கலைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பிக்கொண்டு இருக்கிறார் சினேகா. அதிக விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்ததால், சொந்தமாக ஜவுளிக்கடை துவங்கலாம் என்ற திடீர் யோசனை சினேகாவுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.





