தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சகாப்தமாக வாழ்ந்து வருகிறார். கடந்த 1977ம் ஆண்டில் அபூர்வ ராகவங்கள் என்ற கே பாலசந்தர் இயக்கிய படம் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த் 46 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இன்னும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். 73 வயதிலும் வேட்டையன் படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ரஜினிகாந்த் ஆரம்பத்தில் நடித்த போது முதலில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். தவிர சில தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்தார். ஆனால் எதிலுமே அவருக்கான பெரிய அடையாளம் கிடைக்கவில்லை. பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில், பரட்டையன் கேரக்டரில் நடித்த பிறகுதான், அவரது அடையாளமாக மக்களுக்கு தெரிந்தது.
அதன்பிறகு படிப்படியாக சினிமா பயணத்தில் தன் உயரத்தை அதிகரித்துக்கொண்ட ரஜினிகாந்த், கமலுடன் பல படங்களில் நடித்தது அவருக்கு பெரிய செல்வாக்கை பெற்றுத் தந்தது. ரஜினி கமல், கமல் ரஜினி என ரசிகர்கள் மத்தியில் மாறி மாறி உச்சரிக்கப்பட்டு இருவரும் சமகாலத்து நடிகர்களாக ரசிகர்கள் மத்தியில் பெரிய அங்கீகாரத்தை பெற்றனர்.
இதில் மூன்று முடிச்சு படத்தில் நடித்த போது கமலுக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளம், ஸ்ரீதேவிக்கு ரூ. 5 ஆயிரம், ரஜினிக்கு ரூ. 2 ஆயிரம்தான் சம்பளம் தரப்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீதேவியிடம், நானும் கமல் போல கைநிறைய சம்பளம் வாங்குவேனா, பெரிய நடிகனாக வருவேனா என வருத்தப்பட்டு பேசிய ரஜினிக்கு, ஸ்ரீதேவி நம்பிக்கை கொடுத்து நீங்களும் கமல் மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட்டா வருவீங்க என கூறியிருக்கிறார். அதை அவரே ஒரு நேர்காணலிலும் பல ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்கிறார்.
அப்படி இருந்த நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக சிகரம் தொட்டு, அவர் நின்றால், நடந்தால் செய்தியாக மாறும் அளவுக்கு மிக பிரபலமாக இன்று இருக்கிறார். அம்பானி இல்லத் திருமண விழாவிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியிலும் முக்கிய விருந்தினராக அழைக்கப்படுகிறார்.
அப்படிப்பட்ட ரஜினிகாந்த் கடந்த 2011ம் ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான் நிலையில் சிங்கப்பூரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது நடிகை ஸ்ரீதேவி, ரஜினி விரைவில் உடல் குணமடைந்து நலம் பெற ஸ்ரீரடி சாய்பாபாவிடம் வேண்டி, 7 நாட்கள் விரதம் இருந்திருக்கிறார். ரஜினி குணமடைந்த தகவல் அறிந்த பிறகு, தனது விரதத்தை முடித்திருக்கிறார். இதை நடிகை ஸ்ரீதேவியே வெளிப்படையாக கூறியிருக்கிறார். ரஜினியுடன் பல படங்களில் ஸ்ரீதேவி துவக்கத்தில் நடித்தவர்.. அவர்களுக்குள் அப்படி ஒரு உன்னதமான, உயர்ந்த நட்பு இருந்தது கண்டு ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.





