உள்ளொழுக்கு என்ற மலையாள படத்தில் சிறப்பாக நடித்த நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவர் பெறும் 2வது தேசிய விருதாகும். தமிழ் மலையாளத்தில் பிரபல சீனியர் நடிகையாக இருக்கும் நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஊர்வசி கூறியதாவது, அவர்களால் எப்படி ஆடுஜீவிதம் படத்தை புறக்கணிக்க முடிந்தது? நஜீபின் வாழ்க்கையையும் அவரது துயரங்களையும் வெளிப்படுத்த நேரத்தையும் உழைப்பையும் கொட்டி உடல் ரீதியான மாற்றத்தை ஒரு நடிகர் அனுபவித்திருக்கிறார்.
இந்த புறக்கணிப்புக்கு எம்புரான் படம்தான் காரணம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். விருதுகள் அரசியலாக மாறக்கூடாது. துணை கதாபாத்திரங்களுக்கான விருதுக்கு பிரதான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தால் உண்மையான துணை நடிகர்களுக்கு என்ன நடக்கும்? அவர்கள் தங்கள் திறமையை மேம்படுத்த முயற்சிப்பதற்கான உந்துதல் எங்கே, முன்னணி வேடமா அல்லது துணை வேடமா என்பதை தீர்மானிக்க நடிப்பை எவ்வாறு அளந்தார்கள்?
கடந்த 2005ம் ஆண்டில் வெளியான அச்சுவிண்டே அம்மா படத்துக்காகவும் சிறந்த துணை நடிகை விருது எனக்கு வழங்கப்பட்டது. அப்போது நான் அதற்கு எதிராக குரல் எழுப்பவில்லை. காரணம் பர்சானியா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது சரிகாவுக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மீண்டும் திரைக்கு வருகிறார் என்பதால் அப்போது எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது என்று கருதினேன்.
ஆனால் இந்த முறை நான் எனக்காக மட்டும் அல்ல, என் இளைய சக நடிகர்களுக்காகவும் பேச வேண்டும். தெற்கில் திறமையான நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போது நாம் குரல் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு இந்த அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைக்காமல் போய்விடும். தேசிய விருதுகள் திறமைக்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும். வேறு எதற்கும் அல்ல.
எனக்கு விருதுகள் மீது ஆசை இல்லை. ஆனால் அவை கிடைக்கும்போது அவை உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்க வேண்டும். இப்படி அல்ல. நடுவர் குழு தெற்கை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எதை கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்க கூடாது. நான் எந்த அரசியல் கட்சியும் சார்ந்து இல்லை. நான் வரி செலுத்துகிறேன். எனக்கு எந்த பயமும் இல்லை. நான் இதை கேள்வி கேட்பது எனக்காக அல்ல, எனக்கு பின்னால் வருபவர்களுக்காக.
ஊர்வசி கூட அமைதியாக இருந்தார். நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? என்று எதிர்காலத்தில் யாரும் அவர்களிடம் சொல்வதை நான் விரும்பவில்லை. இங்கே கல்வி அதிகம். தன்னம்பிக்கை அதிகம். அதனால் தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். ஆம் பின்விளைவு இருக்கும். ஆனால் அது பரவாயில்லை. யாராவது பூனைக்கு மணி கட்டித்தான் ஆக வேண்டும் என்று நடிகை ஊர்வசி ஆவேசமாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





