தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் ஒருவராக சத்யராஜ் இருக்கிறார். ஆரம்பத்தில், இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய 24 மணி நேரம், 100வது நாள் போன்ற படங்களில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டிய சத்யராஜ், பிறகு ரஜினி, கமல் போன்ற ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தார்.
ஒரு கட்டத்துக்கு பிறகு கடலோர கவிதைகள் படம் மூலம் சத்யராஜை ஹீரோவாக மாற்றினார் இயக்குனர் பாரதிராஜா. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, சத்யராஜூக்கு கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இதையடுத்து பி வாசு மனோபாலா ஆர் சுந்தர்ராஜன் போன்ற இயக்குனர்களின் கதைகளில் ஹீரோவாக நடித்து சத்யராஜ் பலத்த வரவேற்பை பெற்றார்.
குறிப்பாக நடிகன் ரிக்ஷா மாமா திருமதி பழனிசாமி பிரம்மா தோழர் பாண்டியன் தெற்கு தெரு மச்சான் அமைதிப்படை மகுடம் பங்காளி புதிய வானம் என பல படங்கள் சத்யராஜூக்கு வெற்றி படங்களாக அமைந்தன. அவரது இயக்கி நடித்த படம் வில்லாதி வில்லன் பெரிய வரவேற்பை பெற்றது.
ஒரு கட்டத்தில் ஹீரோ இமேஜ் சரிந்து போனதால், இப்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக சத்யராஜ் நடிக்கிறார். அப்பா, மாமா, போலீஸ் அதிகாரி, டாக்டர் போன்ற கேரக்டர்களிலும் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, இப்போது கூலி படத்தில் நடிகர் ரஜினியுடன் சத்யராஜ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், விஜய் அரசியல் வருகை குறித்து கூறியதாவது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தால், எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை செய்துவிட முடியும். அது நடிகர் விஜய்க்கு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டிருந்தார். எந்த கஷ்டத்திலும் யாரும் பசியோடு இருக்க கூடாது என்று நினைத்தார். அதனால்தான் சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். அந்த மனிதாபிமானம் மட்டும் இருந்துவிட்டால் அரசியலில் சரியாக பயணம் செய்ய முடியும். அந்த நினைப்பு இருந்தால், அரசியலில் எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அது சரியான பாதையில் பயணிக்க வைக்கும் என்று அரசியல்வாதி விஜய் குறித்து சத்யராஜ் கூறியிருக்கிறார்.





