ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் திரிஷா இல்லனா நயன்தாரா. ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம், அன்றைய தேதியில் வசூல் ரீதியாக லாபத்தை கொடுத்தது. ஆனால் இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக கடும் சர்ச்சையை கிளப்பியது.
இளைஞர்களை கவர்வதற்காக இந்த திரைப்படத்தை, எடுத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் இரட்டை அர்த்த வசனங்களும், பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளுமே இதில் அதிகமாக இருந்தன. சொல்லப்போனால் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படி ஒன்றுக்கும் உதவாத இந்த திரைப்படம் கமர்சியலாக எடுக்கப்பட்டதால் அன்றைய தேதியில் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.
ஆனால் இதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. சொல்ல போனால் சிம்புவை வைத்து அவர் எடுத்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது. அதன் கதையே என்ன என்று தெரியவில்லை என பலரும் குழம்பி போயினர்.
இதன் பிறகு பிரபு தேவாவை வைத்து பகிரா என்னும் திரைப்படத்தை எடுத்து ஆதிக் பலரையும் பகிர் கிளப்பினார். இதன்பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட அவர் விஷாலை வைத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கினார். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டைம் ட்ராவல் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்திருந்த ஆதிக் ரவிச்சந்திரன், சிக்கலான அந்த திரைக்கதையை ரசிகர்களுக்கு புரியும் வகையில் எளிதாக விளக்கி இருந்தார். அது மட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இதனால் மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.
இந்த நிலையில் தற்போது அவர் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் பிறகு அவர் மீண்டும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தற்போது விஷால் தயாராகி வருகிறார். ஒருவேளை அந்த திட்டம் கைகூடாவிட்டால் அவர் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.





