இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் காந்தாரா படத்தை தொடர்ந்து இப்போது காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகி வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 2ம் தேதி வெளியான இந்த படம் இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது. தொடர்ந்து இன்னும் பல நூறு கோடி ரூபாய் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட மொழியில் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலை கடந்த 2வது படம் என்ற பெருமையை காந்தாரா சாப்டர் 1 பெற்றிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான யஷ் நடித்த கன்னட படம் கேஜிஎஃப் 2 படம் 1200 கோடி ரூபாய் வசூலித்தது. இப்போது காந்தாரா சாப்டர் 1 படமும் அந்த வரிசையில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது. எப்படியும் ரூ. 1000 கோடி வசூல் உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அட்லி தொடர்ந்து விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த 3 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்று நட்சத்திர இயக்குனராக அவர் மாறினார்.
தொடர்ந்து இந்தியில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற படத்தை அட்லி இயக்கினார். இந்த படமும் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. தொடர்ந்து இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு புதிய படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சயன்பிக்சன் படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் காந்தாரா சாப்டர் 1 படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் அட்லி கூறியதாவது, காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியான போது நான் ஆர்ம்ஸ்டர்டம்மில் இருந்தேன். அங்கிருந்து இரண்டரை மணி நேரம் பயணம் செய்து படத்தைப் பார்த்துவிட்டு உடனே ரிஷப் ஷெட்டிக்கு போனில் அழைத்தேன்.
ஒரு நாயகனாகவும் இயக்குனராகவும் இந்த படத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல. அவர் அனைத்து இயக்குனர்களுக்கும் பெரிய உத்வேகம் அளிக்கிறார். என்னால் நம்பவே முடியவில்லை. ரிஷப் ஷெட்டி இந்த படத்துக்காக தேசிய விருதை வெல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று இயக்குனர் அட்லி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





