சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு காமெடி செய்த அவர் அதன் பிறகு குக் வித் கோமாளி சமையல் போட்டி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். அடிக்கடி காமெடி பன்ச் டயலாக் பேசி கவுன்டர் கொடுத்து பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமடைந்த கேபிஒய் பாலா செலிபரட்டியாக மாறி பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். சினிமாவிலும் காமெடி ரோலில் சில காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை சின்ன சின்ன கேரக்டர்களில் மொத்தம் 18 படங்களில் அவர் நடித்திருக்கிறார். இதில் பல படங்களில் அவர் நடித்த காட்சிகளே திரையில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கேபிஒய் பாலா, மற்றவர்களுக்கு செய்த உதவிகள் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலமானார். குறிப்பாக இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கியது கல்வி உதவி மருத்துவ உதவிகள் இலவச விவசாய பொருட்களை விவசாயிகளுக்கு வழங்குதல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி என தொடர்ந்து தனது வருமானத்தில் பெரும்பகுதியை உதவிகளுக்கே ஒதுக்கி விடுகிறார்.
இதன் அடுத்தகட்டமாக இப்போது சென்னை பல்லாவரத்தில் இலவச மருத்துவமனை ஒன்றை கேபிஒய் பாலா கட்டி வருகிறார். இங்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு 1 ரூபாய் கூட கட்டணமின்றி இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதே தனது நோக்கம் என்று கேபிஒய் பாலா கூறியிருக்கிறார். மக்களுக்கு உதவி செய்வதே தனது லட்சியமாக அவர் கொண்டிருப்பதாால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் கேபிஒய் பாலா தமிழ் சினிமாவில் காந்தி கண்ணாடி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படம் வருகிற 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் கேபிஒய் பாலா உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி பேசினார்.
அப்போது மேடையில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, நிறைய பேருக்கு தானம் தர்மம் பண்றவன் கையில் எப்பவுமே காசு இருந்துட்டு இருக்கணும். எல்லாத்தையும் கொடுத்தாலும் உனக்குன்னு கொஞ்சம் காசு வெச்சுக்கடான்னு கேபிஒய் பாலாகிட்ட சொல்லுவேன். நிறைய பேருக்கு உதவி பண்றவன் கீழே விழுந்தால் உதவி பண்ணனும்னு நினைக்கிற எல்லாருக்கும் பயம் வந்துடும். அந்த பயத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள் என்று நடிகர் கேபிஒய் பாலாவுக்கு நடிகர் விஜய் சேதுபதி அட்வைஸ் கூறினார்.





