அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு மட்டுமே இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஒன்று விடாமுயற்சி மற்றொன்று குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. திரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
ஏன் அஜித் ரசிகர்களுமே இந்த திரைப்படத்திற்கு பச்சை கொடி காட்ட தவறினர். அதற்கு மிக முக்கிய காரணம் அஜித்திற்கான மாஸ் காட்சிகள் மிக மிக குறைவாக இருந்ததுதான். இது அவரது ரசிகர்களுக்கு சலிப்பை உண்டு பண்ண, விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது.
எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் முழுக்க முழுக்க அஜித்தை புகழ் பாடும் வகையிலேயே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அஜித்திற்கான காட்சிகளை முதன்மைப்படுத்தி இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித் ரசிகர்களை தாண்டி இது சாதாரண ரசிகர்களுக்கும் பிடித்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.
ரெட்ரோ பாடல்களை அதிகம் உபயோகித்தது இங்கு சிலருக்கு எரிச்சலை உண்டு பண்ணினாலும், அது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதால் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. மிக முக்கியமாக சுல்தானா பாடலை கூறலாம். பட்டித் தொட்டி எங்கும் அது மீண்டும் ஹிட் அடித்தது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தற்போது அஜித்குமாரின் அடுத்த திரைப்படம் என்ன என்பது பலரது பார்வையும் திரும்பியுள்ளது. ஆனால் அவரோ கார் பந்தயத்தில் படு பிஸியாக இருக்கிறார். கிட்டத்தட்ட அக்டோபர் மாதம் வரை அவர் இதில்தான் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. இதன்பிறகு, அஜித் குமார் மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார்.
நவம்பர் மாதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அது அடுத்த ஆண்டு மே மாதம் வெளிவரும் என்றும் அவரே கூறியிருந்தார். ஆனால் அதன் இயக்குனர் யார் என்றுதான் இதுவரை தெரியவில்லை. ஏற்கனவே அஜித்தை வைத்து இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் பிரசாந்த் நீல், தனுஷ் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இப்படியான சூழலில் லோகேஷ் கனகராஜும் இந்த பட்டியலில் சேர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு மைத்ரி மூவிஸ் நிறுவனத்துடன் ஒரு படத்தில் வேலை புரிய இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அது நிச்சயம், அஜித் உடனான படமாகதான் இருக்கும் என்று பலரும் சொல்லி வருகின்றனர்.





