2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே தமிழ் சினிமாவுக்கு ஒரு மேஜிக் நடந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். பொதுவாக நீண்ட நாட்களாக வெளிவராமல் முடங்கி கிடக்கும் திரைப்படங்கள், பல போராட்டங்களைக் கடந்து ரிலீசாகும்போது அது மக்களின் வரவேற்பை பெறாது என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது.
ஆனால் இதனை எல்லாம் அடித்து நொறுக்கி இருக்கிறது சுந்தர் சி – விஷால் கூட்டணியில் எடுக்கப்பட்டிருக்கும் மதகஜராஜா திரைப்படம். 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் அப்போது ரிலீசாகாமல் தடைப்பட்டது. ஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், அது வெளிவராமல் முடங்கியே கிடந்தது.
இந்த சூழலில் பொங்கலுக்கு அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியீட்டில் இருந்து பின் வாங்க, அவசர அவசரமாக களமிறங்கிய மதகஜராஜா திரைப்படம் சொல்லி அடித்திருக்கிறது. தமிழ் சினிமா இதுவரை பார்த்திருந்த அடித்து துவைத்த கதைதான் என்றாலும், நகைச்சுவை நன்றாக இருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள்.
குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது வரை 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. இப்படியான சூழலில், பல ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி கிடந்த தமிழ் திரைப்படங்களை ரிலீஸ் செய்யும் முனைப்பில் திரையுலகம் இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு எந்தெந்த திரைப்படங்கள் இதுவரை வெளிவராமல் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இதில் முதலில் பார்க்கப் போவது சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல். இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஆகியோர் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இப்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. 2016 இல் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படமும் இந்த பட்டியலில் இருக்கிறது.
மிக முக்கியமாக விக்ரம் கௌதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தை கூறலாம். இதுவும் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிலையில், பொருளாதார சிக்கலால் இப்போது வரை ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி திரைப்படமும், பெட்டிக்குள் முடங்கி இருக்கிறது. பிஜி நாட்டில் இதன் சூட்டிங் நடத்தப்பட்ட சூழலில், அங்கிருந்து சான்றிதழ் கிடைக்க தாமதமாவதே இதற்கு காரணம் என்று பலரும் கூறுகிறார்கள்.





