திரிஷா இல்லனா நயன்தாரா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தனது முதல் திரைப்படத்திலேயே அடல்ட் காமெடியை பொருத்திய ஆதிக், அதனால் பல பேரிடம் சரியாக வாங்கி கட்டிக் கொண்டார். முதல் படத்திலேயே இவ்வளவு ஆபாசங்கள் இந்த இயக்குனருக்கு தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
பெண்களை மிகவும் தரக்குறைவான கண்ணோட்டத்தில் இந்த இயக்குனர் பார்ப்பதாகவும் சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தன. இப்படி ஆரம்பத்திலேயே ஆதிக் கடும் விமர்சனத்திற்கு உள்ளானாலும், அவரது திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது. இளைஞர்கள் பெரும் வரவேற்பு கொடுத்ததால் இந்த திரைப்படம் வசூல் மழை பொழிந்தது.
இதன் பிறகு நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார் ஆதிக். அந்த இளம் இயக்குனரின் திரையுலக பயணத்தையே முடக்கிப் போட்ட திரைப்படம் இதுதான் என்று கூறலாம். சிம்பு நடிப்பில் உருவான இந்த திரைப்படம், படுதோல்வியை சந்தித்ததால் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய அடியை கொடுத்தது.
அந்தப் படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் சிம்புதான் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் வெளிப்படையாக பேசினார். அவர் சூட்டிங்கே வராததன் காரணமாகத்தான் இதன் விளைவு என்றும் அவர் குறிப்பிட்டார். இப்படியான சூழ்நிலையில் அடுத்த படத்தை தொடர முடியாமல் தவித்த ஆதிக், அஜித்தின் மேற்கொண்ட பார்வை திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிறகு அங்கிருந்து பிரபுதேவாவை வைத்து பகிரா என்னும் படத்தை இயக்கி தோல்வி அடைந்தார். இதையடுத்து விஷால், எஸ் ஜே சூர்யாவை வைத்து அவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது. டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் பண்ணியது. இந்த வெற்றிக்கு காரணம் அஜித் குமார் தான் என்று கூறிய ஆதிக், அவர்தான் தன்னை மிகப்பெரிய படம் எடுக்க அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார்.
மேலும் தான் மிகப்பெரிய அஜித் ரசிகர் என்றும் அவர் தெரிவித்தார். இப்படியான சூழ்நிலையில் தான் அஜித்தை அடுத்து இயக்கும் வாய்ப்பு ஆதி ரவிச்சந்திரனுக்கு போயிருக்கிறது. ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறதாம். அஜித்திற்காக ஒரு கதையை உருவாக்கி அவரிடம் நேரில் சந்தித்து இதனை கூறி இருக்கிறார் ஆதிக். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் தொடங்கியுள்ளதாம். இந்த தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் உறுதிப்படுத்தி இருக்கிறார். சரியான நேரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





