ரஜினியின் இரண்டு மகள்களும் திரைத்துறையில் அவ்வபோது இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தையை வைத்து கோச்சடையான் திரைப்படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க அனிமேஷனில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தோல்வியடைந்தது.
படத்தின் கதை அம்சம் நன்றாக இருந்தாலும், அதனை 3டி தொழில்நுட்பத்தில் காட்டியது சரியாக இல்லை என்றும், பேசாமல் இந்த திரைப்படத்தை வரலாற்றுப் பாணியிலேயே எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அந்த நேரத்தில் ரசிகர்கள் விமர்சித்தனர். இதனை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாம் பாகத்தையும் சௌந்தர்யா இயக்கினார்.
இது ஒரு புறம் இருக்க ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மூணு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் அந்த நேரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை எடுத்தார் ஐஸ்வர்யா. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் வந்து போவார். இப்படி இருக்க ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு லால் சலாம் படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா.
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த திரைப்படத்தில், விக்ராந்த் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ரஜினிகாந்த் படத்திற்கே உண்டான ஓபனிங் இந்த படத்தில் மிஸ் ஆனது. இப்படியான சூழலில் படம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு வரும்போது நம்மால் எதுவும் வேலை செய்ய முடியாது. அதுவாக தன்னை மறைத்துக் கொள்ளும். இந்த படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரம் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருப்பதாக இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் உள்ளே வந்ததும், அவரைச் சுற்றியே கதை சொல்லும் படி அமைந்தது என்று பேசி இருக்கிறார்.





