நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் செளந்தர்யா. இருவருமே, இயக்குநர்கள்தான். 3, வை ராஜா வை, லால்சலாம் படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா. இந்த மூன்று படங்களுமே சரியாக ஓடாத நிலையில், அடுத்த ஒரு படத்தை டைரக்ட் செய்ய, ஐஸ்வர்யா தயாராகி வருகிறார். இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை பிரிந்து வாழ்கிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு 17 ஆண்டுகள் ஆகிறது. வளர்ந்த நிலையில் லிங்கா, யாத்ரா என மகன்கள் உள்ள நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவை, இருதரப்பில் உள்ள பெற்றோர்களும் ஏற்கவில்லை. தனது பேச்சை மீறி இருவரும் பிரிந்திருப்பதும் ரஜினிக்கு பயங்கர அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் தனுஷ். அதே போல் ரஜினிகாந்த் நடித்த புதுப்படங்கள் ரிலீஸின் போது தலைவா, என பதிவிட்டு ஒரு ரசிகராக தன் வாழ்த்துகளை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் மருமகன் தனுஷ். அதனால் ரஜினி மீது பற்றுக்கொண்ட தனுஷ், ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய விரும்பாத நிலையில், இப்போது பிரிந்து மட்டுமே இருக்கிறார்.
மனைவி ஐஸ்வர்யா போலவே, தனுஷூம் இப்போது படங்களை டைரக்ட் செய்து வருகிறார். ஏற்கனவே ப. பாண்டி படத்தை டைரக்ட் செய்த தனுஷ், இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன் ஆகிய படங்களை டைரக்ட் செய்து வருகிறார். அத்துடன் தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்தும் வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தனுஷ் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, நான் இயக்கிய 3 படம் மூலம், அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது வேண்டுமானால் நானாக இருக்கலாம். ஆனால் அனிருத்திடம் இப்படி ஒரு திறமை இருப்பதை கண்டுபிடித்தவர் தனுஷ்தான். அனிருத்தை வெளிநாட்டில் போய் படிக்குமாறு, அவரது பெற்றோர் கூறினர். ஆனால் இல்லே, அவன்கிட்ட நிறைய திறமைகள் இருக்கிறது, இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னவரும் தனுஷ்தான்.
அனிருத்துக்கு கிடார் வாங்கி கொடுத்ததில் இருந்து, 3 படத்தில் அனிருத்தை இசையமைப்பாளர் ஆக்கிய வரைக்கும் எல்லா பெருமைக்கும் சொந்தக்காரர் தனுஷ்தான். அதனால் தனுஷ் இல்லை என்றால், இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தனது கணவர் தனுஷ் குறித்து பெருமையாக பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா. சில ஆண்டுகளாக அவர்கள் பிரிந்துள்ள நிலையில், அவர் இப்படி பேசியிருப்பது, இருவரும் இணைவதற்கான ஒரு சூழலை உருவாக்கி இருக்கிறது.





