நடிகர் ரஜினிகாந்தை போலவே அவரது மகள்கள் ஐஸ்வர்யா சௌந்தர்யா இருவருமே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. படங்கள் டைரக்ட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே ரஜினி நடித்த கோச்சடையான் என்ற படத்தை செளந்தர்யா டைரக்ட் செய்தார்.
முழுக்க முழுக்க கிராபிக்ஸில் உருவான அந்த படம் ஓடவில்லை. ரஜினி இருக்கும்போதே பொம்மையாக திரையில் ரஜினிகாந்த் தோன்றியதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இந்த படம் மிக மோசமான தோல்வியை தந்தது. இந்த படம் தயாரிப்பிலும் பலத்த நஷ்டத்தை கொடுத்தது.
அதே போல் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் ஆர்வம் கொண்டவனர். அவர் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குவதற்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனிடம், சில படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தார்.
ஆனால் 3 படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து வை ராஜா வை, லால் சலாம் போன்ற படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார். ஆனால் இந்த படங்களும் சரியாக போகவில்லை. ஆக மொத்தம் 3 படங்களை இயக்கியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு தமிழ் சினிமாவில் பெரிய அடையாளம் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் அவர் 4வது படம் இயக்க களத்தில் இறங்கிவிட்டார். இப்போது குழந்தைகளை மையப்படுத்திய ஒரு புதிய படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்ய உள்ளார். அதற்கான பிரமோ ஷூட்டிங் இப்போது திருவண்ணாமலையில் வேகமாக நடந்து வருகிறது. அங்கு தனது படக்குழுவினருடன் இந்த பணிகளை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேற்கொண்டு வருகிறார்.
தன்னுடைய அப்பா ரஜினியை போலவே அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும் ஆன்மிக நாட்டம் அதிகம். குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அதிக பற்று கொண்டவர். அந்த சென்டிமென்ட் காரணமாக தனது படத்தின் கதை டிஸ்கஷன் போன்றவற்றை எப்போதுமே திருவண்ணாமலையில் அவர் வைத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. ரமண மகரிஷியின் தீவிர பக்தையாகவும் ஐஸ்வர்யா உள்ளார். இப்போது இந்த குழந்தைளை மையப்படுத்திய படமும் திருவண்ணாமலையில் தான் உருவாகி வருகிறது.





