நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா, திரைப்பட இயக்கத்தில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். இவர் பிரபல இயக்குநர்கள் சிலரிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து பயிற்சி பெற்றிருக்கிறார். தனுஷ் – ஸ்ருதிஹாசன் நடித்த 3 இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம். கவுதம் கார்த்திக்கை வைத்து, வை ராஜா வை என்ற படமும் எடுத்தார்.
ஆனால் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய 2 படங்களுமே பிளாப் படங்களாக போய்விட்டன. ஐஸ்வர்யா எதிர்பார்த்த அளவுக்கு, தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக முன்னிலைக்கு வர முடியவில்லை. இந்த சூழலில் நடிகர் தனுஷை பிரிந்த வாழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனால் நல்ல மனமாற்றம் தேவையாக இருப்பதாலும், ஒரு சிறந்த டைரக்டராக எப்படியும் ஒரு நல்ல படத்தை தந்துவிட வேண்டும் என்ற முனைப்பிலும் அவர் இயக்கிய படம்தான் லால் சலாம். மகளின் 3வது படம், நல்ல வெற்றிப்படமாக அமைய விரும்பியே, ரஜினி இதில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடிக்கவும் ஒத்துக்கொண்டார். இதில் ரஜினிக்கான மாஸ் காட்சிகளும் உருவாக்கப்பட்டது.
திட்டமிட்டப்படி வரும் பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் படம் திரைக்கு வருகிறது. கேமியோ ரோல் என்றாலும், 45 நிமிடங்கள் வரை இந்த படத்தில் ரஜினி வருவதால், ரசிகர்களுக்கு ரஜினி படம் பார்த்த திருப்தியே ஏற்படும். மேலும் ரஜினி இதில் சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கேரக்டர்களில் நடித்திருப்பதும் கவனிக்கத்கக்கது.
இந்நிலையில் லால் சலாம் படத்தில் ஆடியோ லான்ச், சென்னை சாய்ராம் கல்லூரியில் சிறப்பாக நடந்தது. இதில் பேசிய ரஜினியின் மகள், படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தின் அப்டேட்டுகளை அவ்வப்போது நாங்கள் வெளியிடுவோம். அப்போதெல்லாம், வேட்டையன் படம் அப்டேட் கொடுங்க, விடாமுயற்சி படம் அப்டேட் கொடுங்க என்றுதான் ரசிகர்கள் கேட்பார்கள். நிறைய கமென்ட்ஸ் குவியும். என்ன இது, நம்ம லால் சலாம் படம் குறித்த அப்டே் கேக்கவே மாட்டேங்கறாங்க. நம்ம பெயர் இந்த லிஸ்ட்லயே இல்லையா என்று தோன்றும். லால் சலாம் படம் பாருங்க, அப்புறம் அப்டேட் கேக்குற உங்க லிஸ்ட்டுல என்னோட படமும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
அவரது அப்பா ரஜினி நடிக்கிற வேட்டையன் படம் பற்றிய அப்டேட் கேட்கறது ஓகே தான், அஜீத் நடிக்கிற விடாமுயற்சி படத்தோட அப்டேட்டை ஐஸ்வர்யாவிடம் கேட்டு, அவரை அப்செட் ஆக்கி விட்டனர் அஜீத்குமார் ரசிகர்கள். ஒருவேளை லால் சலாம் படமும், விடாமுயற்சி படமும் லைக்கா புரடக்சன் சுபாஸ்கரன் தயாரிப்பு என்பதாலும் ரசிகர்கள் இப்படி கேட்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் ஐஸ்வர்யா, இனிமேல் என் படத்தையும் நீங்கள் அப்டேட் கேட்பீர்கள் என்று சவால் விட்டிருக்கிறார். சவாலில் லால் சலாம் ஜெயிக்க வைப்பாரா என்பதை பிப்ரவரி 9ம் தேதி தெரிந்துக்கொள்ளலாம்.





