நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில், நடித்து வருகிறார். ஐதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் திரிஷா, அஜீத்குமார் நடிக்க வேண்டிய பாடல் காட்சியும் எடுக்கப்பட வேண்டும். மீண்டும் அஜர்பைஜான் செல்லும் திட்டத்தில், டைரக்டர் மகிழ்திருமேனி இருந்து வருகிறார்.
வரும் தீபாவளிக்கு விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டி இருப்பதால் கிளமைாக்ஸ் சண்டை காட்சி, அஜீத்குமார் திரிஷா பாடல் காட்சி மற்றும் பேட்ச் ஒர்க் பணிகளை முடித்து விட்டால், அடுத்தக்கட்டமாக போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே கால அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து வரும் ஐதராபாத்தில்தான் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படப்பிடிப்பையும் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் நட்டி, சுமன் நடித்த காட்சிகள் கடந்த வாரத்தில் படமாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இப்போது அஜீத்குமார் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.
விடாமுயற்சி படப்பிடிப்புக்கு இடையிடையே குட்பேட் அக்லி படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் அஜீத்குமார், அங்கு அவர் நடிக்க வேண்டிய காட்சிகளிலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களுக்கும் கெட்டப்பில் பெரிய வித்யாசம் இல்லை என்பதால் டூ இன் ஒன் போல, ஒரே நாளில் இரண்டு படங்களிலும் பகல், இரவு என பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கிறார் அஜீத்குமார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் 3 வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் பரவியது. நல்லவர் ஒருவர், கெட்டவர் ஒருவர், மிகவும் மோசமானவர் ஒருவர் என குட் பேட் அக்லி என்று மூன்று ரோல்களில் அஜீத் நடிப்பதாக ரசிகர்கள் கருதி வந்தனர். அதனால் மூன்று முகம் போல, இந்த படம் அஜீத்குமாருக்கு இருக்கும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இப்போது லேட்டஸ்ட் அப்டேட் ஆக வெளிவந்த தகவலின் படி, அஜீத்குமார் இந்த படத்தில் 3 ரோல்களில் எல்லாம் நடிக்கவில்லை. ஒரே ஒரு கேரக்டரில்தான் நடிக்கிறார். ஆனால் அவரே மூன்று விதமான அவதாரம் எடுக்கிறார். ஒரு அஜீத்குமார் தான் 3 விதமான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார் என்பதும் உறுதியாகி விட்டது.





