துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் குமாருக்கு படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. அவர் துணிவு படத்தின் போதே ஒப்புக்கொண்ட விடாமுயற்சி திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் வெளியாவதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அனேகமாக அடுத்த ஆண்டு மே மாதம் தான் இந்த திரைப்படம் வெளியாகும் என்று பேசிக்கொள்கிறார்கள். இதில் திரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இதைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அட்லி திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். ஹைதராபாத் அதனை தொடர்ந்து ஸ்பெயின் மற்றும் பல்கேரியாவில் இதன் படபிடிப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட அஜித் குமாரின் போர்ஷன்கள் இதில் முடிவு பெற்றதாகவே கூறப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில், அஜித் குமாரை ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்டுவதற்காக தயாராகி வருகிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த திரைப்படம் பில்லா திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் சிலர் யூகித்து வருகிறார்கள். அதற்குக் காரணம், படத்தின் போஸ்டர் ஒன்றுதான்.
ஜெயில் கைதி கெட்டப்பில் அஜித் குமார் காட்சியளிக்க, அவரது கண்ணாடியில் பில்லா படத்தின் போஸ்டர் பிரதிபலித்தது. இதைக் கவனித்த அஜித் ரசிகர்கள் ஒருவேளை, இது வேலு கதாபாத்திரத்தின் நீட்சியாக இருக்கலாம் என்று ஆருடம் கூறினர். இதனிடையே இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு மீண்டும் கார் பந்தயத்தில் களம் இறங்கி இருக்கிறார் அஜித்குமார்.
இதற்காக அஜித்குமார் ரேசிங் என்னும் பெயரில் அவர் தொடங்கி இருக்கும் நிறுவனத்தில், முக்கிய வீரர்கள் இணைந்திருக்கிறார்கள். துபாயில் நடைபெறும் பந்தயத்தில் அஜித் பங்கேற்க உள்ளார். இதற்காக போர்ஷே வகை காரை மாற்றியமைத்து வருகிறார். அதில் தமிழக அரசின் விளையாட்டு துறைக்கான லோகோவும் இடம்பெற்றுள்ளது. தற்போது காருடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





