நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4ம் தேதி துவங்கியது. படப்பிடிப்பை நல்ல நேரம் பார்த்து, சரியான நேரத்தில் துவங்கினார்களா, இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு படப்பிடிப்பு துவங்கியது முதல் இடைவிடாத பிரச்னைகளால், அந்தரத்தில் நின்றுவிட்டது படப்பிடிப்பு.
அஜர்பைஜானில், 4 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை. மீண்டும் படப்பிடிப்பு துவங்குமா, அப்படியே கிடப்பில் இருக்குமா என அஜீத்குமார் ரசிகர்கள் பரிதவித்த நிலையில், வரும் 20ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அஜீத்குமாருக்கு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்துள்ள நிலையில், மாதந்தோறும் அவரது வங்கி கணக்கில் ரூ. 5 கோடி படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை. 3 மாதங்களாக அத்தொகை வழங்காத நிலையில், அஜீத்குமார் படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்ததாக கூறப்பட்டது.
இது படக்குழுவினர் மத்தியில், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், ஏற்கனவே படக்குழுவை சேர்ந்த பாதி பேர் வரை, அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி அஜீத்குமார் 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தந்துள்ள நிலையில், அதற்குள் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும்.
அதே நேரத்தில், மற்ற முக்கிய நடிகர்கள் அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோருடன் அஜீத் ஒன்றாக நடிக்கும் காட்சிகள் நிறைய இருப்பதால், அஜீத் படப்பிடிப்பு வர மறுப்பது பெரிய அதிருப்தியை லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்படுத்தியது. மேலும் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டுதான், குட்பேட் அக்லி படப்பிடிப்புக்கு அஜீத் செல்ல வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இப்போது அஜீத்குமார், விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்வது உறுதியாகிவிட்டது. வரும் 18ம் தேதி அஜர்பைஜான் புறப்பட்டுச் செல்கிறார். ஆனால் மீண்டும் ஜூலை 1ம் தேதி சொந்த வேலை காரணமாக சென்னை திரும்பும் அஜீத்குமார், மீண்டும் சில தினங்கள் கழித்து, அஜர்பைஜான் புறப்பட்டுச் செல்கிறார். ஆக, மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள அஜீத்குமார் ஆயத்தமாகி இருப்பது, அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் லேட்டஸ்ட் தகவலாக வெளிவந்துள்ளது.





