கோலிவுட்டில் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நயன்தாரா. சொல்லப்போனால் அவர் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என்றும் கூறலாம். ஒரு கட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வந்த அவர், அவ்வாறு இனிமேல் தன்னை கூப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஹரி இயக்கிய ஐயா திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பிறகு இடைப்பட்ட காலங்களில், அடுத்தடுத்த படிக்கு முன்னேறினார் நயன்தாரா. மூத்த நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார். ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் கவனம் பெறும் நாயகி ஆக உருவெடுத்தார். இதில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது, அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிந்தது.
இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த அவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்தார். இதில் ஆரம்பத்திலேயே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது கோலமாவு கோகிலா திரைப்படம். நெல்சன்தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
கதைக்கு ஏற்றது போலவே அப்பாவி குணாதிசயத்துடன் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் நயன்தாரா. ஒரு பக்கம் போதை பொருள் கடத்தல், மறுபக்கம் போலீசாரிடமிருந்து தவிப்பது, இன்னொரு பக்கம் வில்லன் கும்பலிடம் இருந்து எஸ்கேப் ஆவது என இந்த திரைப்படத்தின் கதையும் மிகச் சரியான ஓட்டத்தில் எடுக்கப்பட, யோகி பாபுவின் காமெடியும் கை கொடுத்தது.
இப்படி அனைத்தும் சரியாக அமைந்ததால் கோலமாவு கோகிலா திரைப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அறம் மாயா உள்ளிட்ட திரைப்படங்களும் நயன்தாராவுக்கு வெற்றியை கொடுக்க அதன்பிறகு அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த எந்த திரைப்படங்களும் பெரிய அளவு சக்சஸ் ஆகவில்லை.
இப்படியான சூழலில் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வரும் நெல்சன், அதன் வேலைகள் முடிந்ததும் இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட இருக்கிறாராம். ஆனால் அவர் இந்த திரைப்படத்தை இயக்கப் போவது இல்லையாம். நெல்சனின் உதவியாளரும், பிளடி பக்கர் திரைப்படத்தை எடுத்தவருமான சிவபாலன் முத்துக்குமார்தான் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





