தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பெரிய அளவில் புகழ் பெற்ற பிறகு சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்வார்கள். அதுதான் வழக்கமாக நடந்திருக்கிறது. எம்ஜிஆர் சிவாஜி கணேசன் கமல்ஹாசன் விஜயகாந்த் சரத்குமார் கார்த்திக் உட்பட சமீபத்தில் அரசியலுக்கு வந்த நடிகர் விஜய் வரை வழக்கமாக அப்படி தான் நடந்துள்ளது.
ஆனால் நடிகர் அஜீத்குமார் மட்டும் இதில் முற்றிலும் மாறுபட்டவர். அவர் சினிமாவில் இப்போது டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் அரசியல் பக்கம் அவரது கவனம் சிறிது கூட இல்லை. ஆனால் கார் ரேஸ் பைக் ரேஸ் ரைபில் சுடுதல் என விளையாட்டு சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் காட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு முழுவதும் கார் ரேஸ்க்காக 12 மாதங்களையும் ஒதுக்கிய அவர் இப்போது ஜனவரி மாதம் முழுவதும் துபாயில் நடந்த கார் ரேஸில் ஆர்வமாக கலந்துக்கொண்டார். இந்த மாதம் இறுதியில் அவரது அடுத்த படம் ஷூட்டிங் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது வரை அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
துபாயில் தொடர்ந்து நடத்தப்படும் கார் ரேஸில் பங்கேற்று வரும் நடிகர் அஜீத்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அஜீத்குமார் கூறியதாவது, கார் ரேஸ் எனக்கு மிகவும் முக்கியமானது. பெரும்பாலான நேரங்களில் ஒருவர் தனது சவுகரியத்தை விட்டு வெளியே வரும்போது அவர் அப்படி செய்யலாமா, கூடாதா என்பது போன்ற பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுகின்றன.
ஆமாம். நான் அப்படிப்பட்ட விமர்சனத்தை விவாதத்தை எதிர்கொள்கிறேன். மலேசியா துபாய் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னுடைய நலம் விரும்பிகளின் ஆதரவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். சர்க்யூட் ஆப் ஸ்பாவில் என்னை ஆதரிக்க சுமார் 9 ஆயிரம் ரசிகர்களும் நர்பர்கிங்கில் 6 ஆயிரம் ரசிகர்களும் வந்திருந்தனர்.
நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு நிச்சயமாக உறுதிப்படுத்துகிறது. உண்மையைச் சொல்லப்போனால் நான் இதை எனக்காக செய்யவில்லை. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு. என்னால் முடிந்த வரை நீண்ட ஒரு பந்தய ஓட்டுனராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன் என்று நடிகர் அஜீத்குமார் அப்போது கூறியிருக்கிறார்.





