நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் அஜீத்குமார் மஞ்சுவாரியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நல்ல வரவேற்பை, வசூலை பெற்ற இந்த படம் கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியானது.
அதன்பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் திரிஷா அர்ஜூன் ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த படம் விடாமுயற்சி. 2023ம் ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கிய இந்த படம் 15 மாதங்களாகியும் இன்னும் திரைக்கு வரவில்லை.
இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி என்ற மற்றொரு படத்திலும் நடிகர் அஜீத்குமார் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திலும் திரிஷா தான் ஜோடியாக நடித்திருக்கிறார். பிரசன்னா பிரபு அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 10ம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது.
நடிகர் அஜீத்குமார் படம் வெளியான 2 ஆண்டுகள் ஆன நிலையில், வரும் பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, பின்பு லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்து விட்டது. இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
விடாமுயற்சி படத்தை பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தை காப்பியடித்து எடுத்துள்ள நிலையில், அந்த படத்தை தயாரித்த பாராமவுண்டன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ரூ. 30 கோடி இழப்பீடு தொகை தருமாறு, லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. அதை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த காரணத்தால் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு அறிவித்தபடி ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் பொங்கல் ரிலீஸ் தள்ளிப் போனதால் நடிகர் அஜீத்குமார் ஏப்ரல் 24ம் தேதி விடாமுயற்சி படத்தை வெளியிட ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அதற்குள் ஏப்ரல் 10ம் தேதி குட்பேட் அக்லி படம் ரிலீஸ் அறிவிக்கப்பட்டதால், தனது ஆசையை லைகா நிறுவனத்திடம் சொல்லாமலேயே அஜீத்குமார் சைலண்ட் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





