அஜித்குமார் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு முன்பு அஜித் நடித்த வலிமை படம் கலவையான விமர்னங்களை பெற்றது. இதனால் துணிவை ரொம்பவே கவனமாக கையாண்டிருந்தார் ஹெச்.வினோத். வங்கி கொள்ளையையும், வங்கி மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தது.
கமர்ஷியல் ரீதியாகவும், சமூகத்தின் மேல் அக்கறையுடனும் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கி கதை ரீதியாக துணிவு படம் ஹிட்டடித்ததால் அஜித் ரொம்பவே உற்சாகத்தில் இருந்ததாக கூறப்பட்டடு. இதற்கிடையே துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். அதை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதியை தயாரிப்பு தரப்பு மாற்ற சொன்னதால் அதை மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் விக்கி.
இதனையடுத்து அந்த படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் பெயர் சுமாராக இருப்பதாக ரசிகர்கள் கூறினாலும் மகிழ் திறமை வாய்ந்த இயக்குநர் என்பதால் அவரது மேக்கிங் பேசும் என்று நம்பிக்கையில் இருக்கின்றனர். இயக்குநர் இறுதி செய்யப்பட்டாலும் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் எதுவுமே வேகம் எடுக்காமல் இருந்தன.
அதற்கு காரணம் அமலாக்கத் துறை லைகா நிறுவனத்தில் நடத்திய சோதனைதான் என்று சொல்லப்பட்டது. இதற்கிடையே படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதற்கு அவர் ஒத்துக்கொண்டார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் படம் தொடங்க தொடர்ந்து தாமதம் ஆவதால் கௌரவ் நாராயணன் படத்தில் நடிக்க த்ரிஷா கமிட்டானதால் விடாமுயற்சியை அவர் கைவிட்டுவிட்டார் எனவும் கோடம்பாக்கத்தில் பேச்சு ஓடுகிரது.
நிலைமை இப்படி இருக்க அஜித்தோ முதல் கட்ட உலக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். ஆனால் அப்போதும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. கதையை நல்லபடியாக தயார் செய்ய மகிழுக்கு அஜித் டைம் கொடுத்ததால்தான் இந்தத் தாமதம் என சொல்லப்பட்டது. இதனையடுத்து மீண்டும் அஜித்குமார் வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார். இதனால் விடாமுயற்சி நிலைமை என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.
இந்நிலையில் வெளிநாட்டு ட்ரிப்பை முடித்துவிட்டு அஜித்குமார் இன்று சென்னை திரும்பினார். ரெட் கலர் டீ ஷர்ட்டில் செம கேஷுவலாக வந்திறங்கிய அவர் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அஜித் சென்னை திரும்பிவிட்டதால் விடாமுயற்சிக்கு விடிவுகாலம் வந்துவிட்டதாக கருதப்படுகிறது. மேலும் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 17ஆம் தேதி செனனியில் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.





