நடிகர் அஜீத்குமார் நடிப்பில், விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கியதில் இருந்து விடாமல் துரத்துகிறது பிரச்னைகள். எப்படியேனும் ஏதேனும் ஒரு வகையில் படப்பிடிப்பை தொடர விடாமல், விடாமுயற்சி படத்துக்கு, விடாமுயற்சியாக சோதனைகளும் வந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் இப்போது புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங், கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அஜர்பைஜானில் துவங்கியது. படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் படத்தின் கலை இயக்குநர் திடீரென உயிரிழந்தார். இவர் அஜீத்குமாரின் நெருங்கிய நண்பரும் கூட. இதனால் படக்குழு அப்செட் ஆனது.
அடுத்து அஜீத்குமாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா திடீரென மாற்றப்பட்டு, ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ் நியமிக்கப்பட்டார். இது அஜீத்குமாரை மூடு அவுட் செய்தது. தொடர்ந்து அங்கு வாரத்தில் 2 நாட்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை என்ற நிலையில், 7 நாட்களும் ஷூட்டிங் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே படப்பிடிப்பு நடந்த பகுதியில் மணல் புயல், பனி மழை, கடும் குளிர், சூறாவளி என்ற இயற்கை சீற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு, படப்பிடிப்பு பாதி நாட்கள் நடக்கவே இல்லை. இதனால், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒவ்வொரு முறையும் பல லட்சம் ரூபாய் விரயமானது. இதைவிட முக்கியமாக மார்ச் மாதம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வேண்டிய புதிய படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது. அதற்கு அஜீத்குமாரை நடிக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில் இனி அஜர்பைஜானில் ஷூட்டிங் நடத்த முடியாது என்ற இறுதி முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அடுத்து ஷார்ஜா அல்லது ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி மற்றும் படக்குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் நாயகி திரிஷா மலையாளம், தெலுங்கு, தமிழ் என பிறமொழிகளில் முக்கியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே நடிகை திரிஷா கொடுத்த கால்ஷீட் தேதிகளில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடத்தவில்லை. இப்போது அவர் பிறமொழி படங்களில் கால்ஷீட் கொடுத்து விட்டதால், அந்த தேதிகளில் அவரை நடிக்க அழைக்க முடியாத நெருக்கடி மகிழ்திருமேனிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அஜீத்- திரிஷா ஒன்றாக நடிக்க வேண்டிய காட்சிகளை படம் எடுப்பதில் விடாமுயற்சி படக்குழுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.





