அஜித் குமாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விடா முயற்சி திரைப்படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. திரிஷா அர்ஜுன் ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.
குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி தொய்வாக இருந்ததாக பலர் கூறினார்கள். அதேபோல் அஜித்திற்கு மாஸ் காட்சிகள் அமையாதது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் அஜித்திற்கு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இதனை இயக்கியிருந்தார்.
முழுக்க முழுக்க மசாலா ரகத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் கதைக்கு எந்த ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், அஜித்திற்கான மாஸ் காட்சிகளை மட்டும் நம்பியே இதனை இயக்கி இருந்தார் ஆதிக். அதுவும் இங்கு சரியாக ஒர்க் அவுட் ஆனதால், குட் பேட் அக்லி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதே சமயம் கலவையான விமர்சனத்துக்கும் அந்த திரைப்படம் ஆளானது. கமர்சியல் திரைப்படம் என்றாலும் அது கொஞ்சமாவது நியாயமாக இருக்கும் வகையில் இருக்க வேண்டாமா, எத்தனை ரெட்ரோ பாடல்கள்தான் இடம்பெறும் என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தற்போது கார்பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். ஐரோப்பிய நாடுகளில் அவர் பந்தயங்களில் ஈடுபட்டு இருக்கிறார். தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும், அதன்பிறகு ஆறு ஆண்டுகள் திரைப்படங்களிலேயே கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரது அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கேஜிஎப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்கிறார்கள். அதிக பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறதாம். அவரது அறுபத்தி நான்காவது திரைப்படமாக இது உருவாகும் சூழலில், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.





