துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் அடுத்ததாக, விக்னேஷ் சிவன் உடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட உரசல் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது.
இதன் பிறகு அஜித் குமார் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனி பெற்றார். ஏற்கனவே க்ரைம் திரில்லர் படங்களை இயக்குவதில் வல்லவரான மகிழ் திருமேனி, அஜித் குமாருடன் இணைந்ததால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்தது. படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைத்து அறிவிப்பையும் வெளியிட்டது படக்குழு.
இந்த நிலையில் மிகவும் தாமதமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படத்திற்கான சூட்டிங் தொடங்கப்பட்டது. தொடக்கத்திலேயே அஜர்பைஜான் நாட்டிற்கு படக்குழு மூவ் ஆனது. அங்கு கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் அஜித்துடன் அர்ஜுன் திரிஷா ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டது. இவை எல்லாமே செவிவழிச் செய்திகளாகவே இருந்த சூழலில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்தார் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா. அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பான காட்சியையும் அவர் வெளியிட்டார்.
அதில் அஜித் மற்றும் ஆரவ்வில் இருவரும் கார் விபத்தில் சிக்கிக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதைப் பார்த்து ரசிகர்கள் பதறிப் போய்விட்டனர். இனி இந்த செயல் வேண்டாம் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இது நடுவே தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் படம் தொடர்பான போஸ்டர்களை வெளியிட்டது. இதில் அஜித் இளமையான தோற்றத்துடன் த்ரிஷாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
இந்த நிலையில் தற்போது அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்துடன் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் சில நாட்கள் சூட்டிங் நடைபெற இருக்கிறதாம். அத்துடன் விடாமுயற்சியின் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியும் இந்த ஆண்டுக்குள் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





