தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் அஜித் குமார், தனது சிறுவயது முதலே கார் மற்றும் பைக் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் மெக்கானிக்காக இருந்து நடிகராக மாறியதே இதற்கு காரணம். ஆரம்ப காலகட்டத்தில் நடிப்போடு சேர்ந்து பந்தயத்திலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இதன் காரணமாக பல விபத்துகளையும் அவர் சந்தித்திருக்கிறார். முதுகுத்தண்டில் பிரச்சனை ஏற்பட்டு பல நாட்கள் அவர் ஓய்வில் இருந்தார். பிறகு ஒரு கட்டத்தில் பந்தயத்தை கைவிட்டு, முழுக்க முழுக்க திரைத்துறையிலேயே அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வெள்ளித்தறையில் தனி பாதையை வகுத்து அதில் அவர் பயணிக்க அஜித்துக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது.
தற்போது வரை அவர் திரைப்படம் வெளியாகிறது என்றால், திரையரங்குகள் திருவிழாவாக மாறும். மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் ஒரு வாரத்தில் ஈட்டும் வருவாயை அஜித் திரைப்படங்கள் வெறும் மூன்றே நாட்களில் பார்த்து விடும். இப்படி தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கும் அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.
இப்படியான சூழ்நிலையில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாமலேயே உள்ளது. கே ஜி எஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், அஜித் குமாரை வைத்து படம் இயக்குவதாக பேசப்பட்டது. ஆனால் அது எந்த அளவில் இருக்கிறது என்று கூறப்படவில்லை. ஜெயம் ராஜா சிறுத்தை சிவா வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான பட்டியலில் இருக்கின்றனர்.
இப்படியான சூழலில் நடிப்பிற்கு சில காலம் ஓய்வு கொடுத்து மீண்டும் கார்பந்தயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் அஜித்குமார். இதற்காக அஜித்குமார் ரேசிங் என்னும் குழுவை அவர் உருவாக்கியுள்ளார். இதில் அவருடன் மூன்று பேர் இணைந்து இருக்கின்றனர். இந்த அணி துபாயில் நடைபெறும் ரேஸில் கலந்து கொண்டுள்ளது.
இதற்கான பயிற்சியில் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் துபாயில் ரேஸை தனது நண்பர்களும் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார் அஜித்குமார். இதற்காக அவர் பலரை துபாய்க்கு அழைத்து இருக்கிறார். இதில் சிறுத்தை சிவாவிற்கும் அழைப்பு சென்றுள்ளது. ஒருவேளை அவர்கள் இந்த சந்திப்பின்போது அடுத்த திரைப்படம் குறித்து பேசிக் கொள்ளலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





