சினிமாவில் எப்போதுமே திரையில் காணும் நட்சத்திர கலைஞர்களை மட்டுமே ரசிகர்கள் பெரிய அளவில் நினைக்கின்றனர். அவர்களது நடிப்பை பார்த்து ரசிக்கின்றனர். ஆனால் ஒரு படம் உருவாக காரணமாக இருக்கும் தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் தொழில்நுட்ப கலைஞர்கள் குறிப்பாக அந்த படம் உருவாக பல மாதங்கள் உழைக்கும் தொழிலாளர்கள் குறித்து ரசிகர்கள் பெரும்பாலும் சிந்திப்பதே இல்லை.
ஒரு திரைப்படம் பூஜை போட்டது முதல் படப்பிடிப்பு நிறைவடைந்து பூசணிக்காய் உடைக்கும் வரை திரைக்கு பின்னால் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் அயராத உழைப்பு இருக்கிறது. ரத்தமும் வியர்வையும் சிந்தி அவர்கள் தரும் ஒத்துழைப்பும் அயராத உழைப்பும்தான் ஒரு படம் திரையில் வர காரணமாக இருக்கிறது.
ஆனால் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களை விட ஒரு படத்துக்காக அதிக உழைப்பை தருபவர்கள் உண்மையில் யாரென்றால் படப்பிடிப்பு தளத்தில் உழைக்கும் தொழிலாளர்கள்தான். இப்படி தமிழ் சினிமாவில் உள்ள திரைப்பட தொழிலாளர்களின் அமைப்புதான் பெப்ஸி, இந்த அமைப்பின் தலைவராக இப்போது இயக்குனர் ஆர்கே செல்வமணி இருந்து வருகிறார்.
சமீபகாலமாக பெரும்பாலான நட்சத்திர நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் உருவாக்கப்படுவதில்லை. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதே போல் கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் துபாய் சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் மாதக்கணக்கில் படப்பிடிப்பு நடத்த சென்று விடுகின்றனர்.
இப்படி பெரும்பாலான பெரிய படங்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் மாதக்கணக்கில் படப்பிடிப்பு நடத்தப்படும் போது தமிழ்நாட்டில் உள்ள சினிமா தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். ஏனென்றால் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளுக்கு இந்த தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவதில்லை. பெரும்பாலும் அங்குள்ள திரைப்பட தொழிலாளர்களை படக்குழுவினர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
வருகிற நவம்பர் மாதம் அஜீத்குமார் நடிக்கும் ஏகே 64 படப்பிடிப்பு துவங்குகிறது. முதலில் சென்னையில் செட் அமைத்து இங்குதான் படப்பிடிப்பு நடத்த முடிவானது. ஆனால் அஜீத்குமார் ஐதராபாத் சென்றுவிடலாம் என்று கூறியதால் இன்று ஐதராபாத்தில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருக்கின்றனர். இதனால் சென்னையை சேர்ந்த தமிழ் சினிமா தொழிலாளர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர். இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி பலமுறை பேசியும் இதற்கு பலன் கிடைக்கவில்லை.





