நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்தாண்டில் விடாமுயற்சி குட்பேட் அக்லி என்ற 2 படங்கள் ரிலீஸானது. அதன்பிறகு அவர் இதுவரை அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பல வெளிநாடுகளில் அவர் கார் ரேஸில் பங்கேற்றும் வருகிறார்.
இதற்கிடையே பெல்ஜியத்தில் இருந்த அவர், சட்டசபை தேர்தலுக்கு முந்தைய நாளில் சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்தார். தனது ஜனநாயக கடமையான ஓட்டுப் போட வேண்டும் என்பதற்காகவே அவர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 23ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளில் காலை திருவான்மியூரில் உள்ள தனது பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிக்கு நடிகர் அஜீத்குமார் காரில் வந்தார். வெள்ளை பேண்ட் வெள்ளை சர்ட் வெள்ளை கோட் கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்து வந்த அவர் அந்த ஓட்டு சாவடியில் முதல் ஆளாக தனது ஓட்டை பதிவு செய்தார்.
ஓட்டுப்பதிவு நாளில் காலை 7 மணி முதல்தான் வாக்குப்பதிவு துவங்க வேண்டும். ஆனால் 6.55 மணி முதல் 7 மணிக்குள் அஜீத்குமார் தனது வாக்கை செலுத்தியதால், தமிழகத்திலேயே முதல் ஆளாக ஓட்டை பதிவு செய்தவர் அஜீத்குமார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் 7 மணிக்கு பிறகு தேர்தல் விதிமுறைப்படி ஒருவர் தனது வாக்கை செலுத்த வேண்டும்.
அப்படிப்பட்ட விதிமுறையை மீறி அஜீத்குமார் சில நிமிடங்கள் முன்னதாக ஓட்டை செலுத்தியதால் அவரது ஓட்டை செல்லாத ஓட்டாக அறிவிக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் ஓட்டுப் போட போகும் போது ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் இடது கை ஆள்காட்டி விரலில்தான் மை வைக்க வேண்டும்.
ஆனால் அஜீத்குமாருக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது. அஜீத்குமாருக்கு எந்த கை விரலில் மை வைக்க வேண்டும் என்பது கூட தெரியாதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி அஜீத்குமார் முதல் ஆளாக வந்து தனது ஜனநாயக கடமையை செய்த போதும் விமர்சனங்கள் எழுந்துள்ளதால் அஜீத் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.





