நடிகர்கள் விஜய், அஜித்குமார் இடையிலான போட்டி கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜீத் என இதுவும் ஆரோக்கியமான போட்டிதான். உண்மையில் அவர்களுக்குள் போட்டி அல்ல, அவர்கள் நடிக்கும் படங்களுக்கு இடையே தான் இந்த போட்டி. அதனால்தான் இருவரும் மாறி மாறி வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அஜித் படங்களை காட்டிலும் விஜய் படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்து வருகின்றன. அஜித்குமார் அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைப்பது, அவ்வப்போது சுமாரான கதைகளில் நடிப்பது, சில நேரங்களில் மட்டுமே சூப்பர் ஹிட் படங்களை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.
எனினும் நடிகர் விஜய்தான் வெற்றிப் படங்களைத் தருவதில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ஆனால் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அவர் துவக்கி இருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் விஜய் 69 படத்தை முடித்துவிட்டு, அடுத்த 2025 ஆம் ஆண்டு முதல் கட்சி பணிகளை முழுமையாக ஈடுபட்டு, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறார்.
இதற்கிடையில் நடிகர் விஜய் நடித்த கில்லி படம், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியானது, ரி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை புரிந்தது. இதுவரை ரி ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில், இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது, தமிழ்நாட்டில் முதல் முறையாக விஜய் நடித்த கில்லி படம் மட்டும் தான். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, பல வெற்றி படங்களை மறு வெளியீடு செய்ய, படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இந்தியன், 7ஜி ரெயின்போ காலனி, இந்தியன், ரன் போன்ற படங்களை ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர். நடிகர் அஜித்குமார் பிறந்த நாள் மே 1ஆம் தேதி மங்காத்தா வெளிநாடுகளில் வெளியானது. தீனா மற்றும் பில்லா படங்கள் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆனது.
ஆனால் விஜய் நடித்த கில்லி படத்துக்கு கிடைத்த வரவேற்பு, அஜீத்குமார் நடிப்பில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த 3 படங்களுக்குமே கிடைக்கவில்லை. விஜய் செய்யும் சாதனைகளை, அடுத்து விஜய்தான் முறியடிக்கிறார். கில்லி படம் போல, அஜித்தின் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியும் இதில் எந்த படமுமே பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. தியேட்டர்களில் இப்போதே கூட்டம் காணப்படவில்லை. முதல் நாளில் மட்டும் ஆட்டம் போட்டு தியேட்டருக்குள் வெடி போட்ட ரசிகர்கள், பிறகு பெரிய அளவில் கொண்டாடவில்லை. விஜய்க்கு போட்டி விஜய்தான், எப்பவுமே அஜீத்குமார் தளபதி பக்கத்தில் நெருங்கக் கூட முடியாது என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டி வருகின்றனர்.





