சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையேயான உறவை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தால், முதல் திரைப்படத்திலேயே சர்ச்சைக்குள்ளான நடிகை என்னும் பெயரை சம்பாதித்தார் அமலா பால். சிந்து சமவெளி ஹீரோயின் என இணையத்தில் அதிகமாக பேசப்பட, அவரது அந்த இமேஜை உடைத்தது மைனா திரைப்படம்.
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்க, மைனாவாகவே வாழ்ந்திருந்தார் அமலாபால். தமிழ் சினிமாவிற்கு மிக புதுமையான களமாக அமைந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். இந்த படத்திற்காக அமலா பால் தமிழ்நாடு அரசின் மாநில விருதை பெற்றார்.
தொடர்ந்து மலையாளம் திரைப்படங்களின் கவனம் செலுத்தி வந்த அவர், தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் நடித்தார். இதன்பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்தார் அமலா பால்.
இந்த நிலையில், தெய்வ திருமகள், தலைவா படங்களில் நடித்தபோது அதன் இயக்குனர் ஏ எல் விஜய்க்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரின் காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க, 2014ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய், அமலா பால் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் அமலா பால். 2014ஆம் ஆண்டில் மட்டும் அவரது நடிப்பில் நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி படங்கள் வெளியாகின.
இந்நிலையில் திடீரென விஜய் – அமலாபால் ஜோடி இடையேயான தாம்பத்ய உறவு கசக்க ஆரம்பித்தது. இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தின் படிகளில் ஏற, 2017ஆம் ஆண்டு சட்டப்படி பிரிந்தனர். இதன்பிறகு பெண் மருத்துவரை ஏ எல் விஜய் மணந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தபுறம், படங்களில் நடிப்பதிலேயே அமலா ஆர்வம் காட்டி வந்தார். அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, ராட்சசன் படங்களில் அவர் நடித்தார். ஆனால் அதன்பிறகு அமலாவுக்கு பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராமில் குடியிருந்த அவர், செல்லும் இடங்களில் எல்லாம் வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அமலா பாலின் பிறந்தநாளின்போது அவரது நண்பர் ஜெகத் தேசாய் காதலிப்பதாக ப்ரொபோஸ் செய்தார். இதற்கு அமலாவும் பச்சைக்கொடி காட்ட இருவரின் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், இருவரும் எந்த முன்னறிவிப்பும் இன்றி, திருமணம் செய்து கொண்டனர். கேரளாவில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்ததும் பலரும் அமலாபாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





