உலக பணக்காரர்களில் ஒருவரும், இந்திய பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவருமான முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா, மும்பையில் கோலாகலமாக கடந்த வாரத்தில் நடந்தது. முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா, ஜூலை 12ம் தேதி வெகு பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என ஏராளமான விவிஐபிகள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், தோனி, ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், சல்மான்கான் என அம்பானி இல்லமே களை கட்டியது.
இந்நிலையில் தனது மகன் ஆனந்த் அம்பானி திருமண விழாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்திய விவிஐபிகளுக்கு காஸ்ட்லியான கிப்ட் ஆக ரூ. 2 கோடி மதிப்புள்ள கை கடிகாரங்களை பரிசளித்து அசத்தினார் முகேஷ் அம்பானி. அதே போல், திருமணத்துக்கு வந்த முக்கிய விஐபிகளும் தங்களது பங்குக்கு மிகப்பெரிய காஸ்ட்லி கிப்ட்டுகளை மணமக்களுக்கு வழங்கியது இப்போது தெரிய வந்துள்ளது.
இதில் பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், பிரான்ஸ் நாட்டில் ரூ, 40 கோடி மதிப்பில் அபார்ட்மென்ட் ஒன்றை ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிக்கு தனது திருமண பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். யாருமே எதிர்பார்க்காத மிகப்பெரிய இந்த கிப்ட்டை தந்து மணமக்களை திக்குமுக்காடச் செய்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பரான அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் தம்பதி, தங்களது குடும்பம் சார்பில் மணமக்களுக்கு, ரூ. 30 கோடி மதிப்புள்ள மரகத நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்துள்ளனர். நடிகர் சல்மான்கான் ரூ. 15 கோடி மதிப்புள்ள சொகுசு பைக் ஒன்றை ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாக தந்து அசத்தியிருக்கிறார்.
இந்தி நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோன் ஆகியோர் சார்பில், இருவரும் இணைந்து ரூ. 20 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிக்கு திருமண பரிசாக அளித்துள்ளனர். நடிகர் அக்ஷய் குமார், ரூ. 60 லட்சம் மதிப்பிலான தங்க பேனாவை திருமண பரிசாக தந்துள்ளார். ரன்பீர் கபூர், ஆலியாபட் தம்பதியர், ரூ. 9 கோடி மதிப்பிலான மெர்சிடஸ் காரை புதுமணத் தம்பதிக்கு பரிசாக அளித்துள்ளனர். அதே போல் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்களும் மிகப்பெரிய பரிசுகளை மணமக்களுக்கு பரிசளித்துள்ளனர்.





