லியோ படம் ரசிகர் சிறப்பு காட்சிக்கு முதலில் அனுமதி மறுத்த தமிழக அரசு, சில தினங்களுக்கு முன் அனுமதி வழங்கியது. அப்போது படம் ரிலீஸ் ஆகும் 19ம் தேதி ஆறு காட்சிகளும், மற்ற 5 நாட்களுக்கு, அதாவது 24ம் தேதி வரை, சிறப்பு ரசிகர் காட்சி உட்பட 5 காட்சிகளும் திரையிடலாம் என அனுமதி வழங்கியது. இது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் கொண்டாட்டம் போட வைத்தது.
இதையடுத்து அதிகாலையில், 4 மணிக்கு சிறப்பு ரசிகர் காட்சி நடத்த தியேட்டர்கள் திட்டமிட்ட நிலையில், 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை ரசிகர் சிறப்பு காட்சி உட்பட 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி எனவும், அதுவும் காலை 9 மணிக்கு துவங்கி, இரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட்டு முடித்துக்கொள்ளவும், அரசு உத்தரவில் தெளிவுபடுத்தியது.
இதற்கு ஒருபடி மேலே போய், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தினமும் 5 காட்சிகளுக்கு மேல் லியோ படத்தை, அரசு உத்தரவை மீறி தியேட்டர்களில் திரையிட்டால் புகார் தெரிவிக்குமாறு தொடர்பு எண்களை வெளியிட்டது. இது மேலும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் விதிமீறல் நடந்தால் தியேட்டர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்பதை மறைமுகமாக எச்சரித்து இருந்தது.
ஏற்கனவே, லியோ டிரெய்லர் வெளியிட்ட கோயம்பேடு ரோகிணி தியேட்டரை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த விஜய் ரசிகர்கள், அதிகாலை 4 மணிக்கு காட்சிக்கு இரவு 12 மணிக்கே தியேட்டர் பகுதிகளை முற்றுகையிட்டு விடுவர். அதுவும் குடியிருப்பு பகுதிக்குள் தியேட்டர் இருக்கும் பட்சத்தில், ரசிகர்களின் அலப்பரைகளால், அருகில் வீடுகளில் வசிப்பவர்கள் தூங்கவே முடியாது என்பதால், அதிகாலை 4 மணி காட்சிக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
படம் ரிலீஸ் நாளில் ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகரின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், 10 ஆயிரம் சரவெடி பட்டாசு வெடித்தல், தோரணம் கட்டுதல், இனிப்பு வழங்குதல் என பலவிதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, தங்களது மகிழ்ச்சியை, குதூகலப்படுத்துவர். மெயின் ரோடுகளில், தியேட்டர் அருகில் உள்ள வழித்தடங்களில் நூற்றுக்கணக்கில் வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவர். இப்படி பல பிரச்னைகள் உண்டு.
இது விஜய் நடித்த லியோ படத்துக்கு மட்டுமல்ல. ரஜினி, அஜீத் நடித்த படங்கள் ரிலீஸின் போதும் இதே பிரச்னைகளால், மக்கள் பாதிக்கப்படவே செய்கின்றனர். ஆனால், இதுபோன்ற தவறான செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என ரஜினி, அஜீத், விஜய் போன்ற நடிகர்கள் ஒரு அறிக்கையோ, வீடியோவோ ரசிகர் கவனத்துக்கு என வெளியிட மாட்டார்கள். ஏனென்றால், அதுபற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லை. எனவே. அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு ஆப்பு வைத்தது போல, மேலே சொன்ன விஷயங்களுக்கும் கடிவாளம் போட, தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே பொதுவான சினிமா ரசிக்ரகளின் எதிர்பார்ப்பாக உள்ளளது.





