திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அன்று முதல் இன்று வரை கவனிக்கப்படுகிறது. குடும்பம் என்ற அமைப்புக்குள் ஒரு ஆணும், பெண்ணும் இணையும் அழுத்தமான சம்பிரதாய சடங்குகள் நிறைந்த ஒரு விழாவாக திருமணங்கள் கொண்டாடப்படுகின்றன.
மிக சாதாரணமாக பதிவு அலுவலகங்களிலும், சிறிய கோவில்களிலும் மாலை மாற்றி, மஞ்சள் சரடு கட்டி திருமணத்தை எளிதாகவும் முடித்துக் கொள்பவர்கள் உள்ளனர். சுயமரியாதை பேசுபவர்கள், இன்னும் ஒரு படி மேலே போய், திருமண ஒப்பந்தம் செய்துக்கொள்கின்றனர். இப்போது லிவிங் டூ ரிலேசன்ஷிப் என்ற பெயரில், திருமணம் செய்யாமலேயே ஆணும், பெண்ணும் குடும்பம் நடத்துகின்றனர்.
என்றாலும், தமிழகத்தில் இன்னும் திருமணம் என்பது ஆணும், பெண்ணும் தாம்பத்திய வாழ்க்கையில் இணையும் ஒரு புனிதமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. வசதி படைத்தவர்கள், திருமண விழாவை வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஆடம்பரமாக கொண்டாடி மகிழ்கின்றனர். வசதியற்ற ஏழை எளிய நடுத்தர மக்கள், அவரவர் வசதிக்கேற்ப திருமண விழாக்களை நடத்துகின்றனர்.
இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகிற ஒரு முக்கிய திருமண விழாவாக, உலக பணக்ககாரர்களில் ஒருவரான மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழா கொண்டாட்டமாக, பிரமாண்ட ஆடம்பரமாக நடந்து வருகிறது. முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா கோலாகலமாக மும்பையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர் சிங், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீக்ஷித், தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள், ரஜினிகாந்த், லதா, சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, விக்கி, அட்லி பிரியா என கோலிவுட் நட்சத்திர குடும்பங்களும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். தினமும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என, மும்பையே திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.
வழக்கமாக திருமணத்துக்கு வருபவர்கள் தான் மணமக்களுக்கு கிப்ட் தருவது வழக்கம். ஆனால் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தனது இல்ல திருமண விழாவுக்கு வந்த விருந்தினர்களை, நடிகர்களை கௌரவிக்கும் விதமாக, Audemars Piguet என்ற காஸ்ட்லி வாட்ச்களை பரிசளித்திருக்கிறார். இதன் விலை மதிப்பு ரூ. 2 கோடி என்று கூறப்படுகிறது. வாட்ச் கிப்ட் ஆக பெற்ற பிரபலங்கள், அதை தங்களது கையில் கட்டி வெளியிட்ட வீடியோ, புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.






