நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவரான மகிழ் திருமேனி இதனை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இதற்கான சூட்டிங் தொடங்கியது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி வெளியானது. ஆனால் அதன் பிறகு இப்போது வரை லைகா நிறுவனம் படம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இதனால் தயாரிப்பு நிறுவனம் மீது அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். வலிமை திரைப்படத்தைப் போல இதிலும் நாங்கள் அப்டேட் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாகவே சலித்து போன அவர்கள், இந்த முறை விடாமுயற்சி குறித்து எந்த ஒரு கேள்வியையும் பகிரங்கமாக அவர்கள் கேட்கவே இல்லை.
இந்த திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஆனால் இதுவும், படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக இதனை அஜித் ரசிகர்கள் உறுதிப்படுத்தினர்.
விடாமுயற்சியின் நிலைமை இப்படி இருக்க படத்தில் சஞ்சய்தத் நடித்திருப்பதாக ஒரு தகவல் கசிந்து உள்ளது. ஆனால் இதனை எதையும் நம்பும் இடத்தில் அஜித் ரசிகர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். தற்போது படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்திலிருந்து ஒரு வீடியோ ஒன்றை, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
அதில் ஆரவுடன் காரில் பயணிக்கும் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்குவது போல வீடியோ அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்த சூட்டிங் நடைபெற்று இருக்கிறது. காரை நிறுத்துவதற்கு தான் அஜித் போராடினார் என்றும், ஆனால் எதிர்பாராத வேளையில் கார் விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவை கண்டு அஜித் ரசிகர்கள் பதறிப் போய் உள்ளனர். எதற்காக தல இப்படி ரிஸ்க் எடுக்கிறார் என்றும் அவர்கள் கேள்வி கேட்டு இனிமேல் அதனை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.





