அண்மையில் வெளியாகி பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய கல்கி 2898 ஏடி படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் படத்தின் வெற்றி குறித்தும் பேசியுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பேட்டி தற்போது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த படம் குறித்து பேசியுள்ள அமிதாப்பச்சன் கூறுகையில் :
இந்த படத்தினை கண்ட பார்வையாளர்களின் அன்பும், பாசமும் ஒருபுறம் மற்றொருபுறம் ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது ஒருபுறம் என இந்த விடயங்கள் எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளனர். தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் படக்குழுவின் உழைப்பும் தான் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.
இந்த படம் குறித்து இயக்குனர் நாக் அஸ்வினுக்கு தொலைநோக்கு பார்வை இருந்தது. மேலும் இந்த படத்தில் கமலஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பல ஆண்டு உழைப்பிற்கு பலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. பிரபாஸிற்கு ஆயிரம் கோடி வசூல் என்பது சாதாரணமாக இருக்கலாம். ஏனெனில் அவரது பல படங்கள் ஆயிரம் கோடி வசூலை தாண்டி உள்ளன. ஆனால் எனக்கு இது பெரிய விஷயம். இதுபோன்ற ஒரு பெரிய மாபெரும் வெற்றி படத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சியை தந்துள்ளது.
உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விடயத்தை கூறுகிறேன். இந்த படத்தினை நான் நான்கு முறை தனியாக பார்த்துவிட்டேன். ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் இந்த படம் எனக்கு ஒரு புது அனுபவத்தை தருகிறது.
என்னை பொறுத்தவரை இது ஒரு படம் அல்ல. நமது கலாச்சாரம் மற்றும் புராணக் கதைகள் குறித்த கல்வியாகவே இதனை கருதுகிறேன் என கல்கி படம் குறித்து அமிதாப்பச்சன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.





