ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இதில் ரஜினிகாந்துடன் தமன்னா, மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், யோகி பாபு, சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “அண்ணாத்த” திரைப்படம் அவ்வளவாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதே போல் இதற்கு முன் நெல்சன் விஜய்யை வைத்து இயக்கிய “பீஸ்ட்” திரைப்படமும் ரசிகர்களை கவரவில்லை. ஆதலால் இருவருமே “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் ஹிட் கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. “லால் சலாம்” திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் இதில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் “ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு மாஸ் ஆன தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது தா.செ.ஞானவேல் ரஜினியை வைத்து இயக்கும் “தலைவர் 170” திரைப்படத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதற்கு முன் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனுடன் இணைந்து, “அந்தா கானூன்”, “ஹம்”, ‘கெராஃப்தார்” ஆகிய ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





