தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். ஜெயம் ரவி என்பதுதான் இவரது பழைய பெயர். இப்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக மாறியிருக்கிறார். சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நிலையில், அதற்கான துவக்க விழா விமரிசையாக நடந்தது.
இந்த விழாவை தொகுப்பாளர் பாவனா தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் நடிகர் யோகிபாபுவும் கலந்துக்கொண்டார். ஏனெனில் இயக்குனராக அவதாரம் எடுக்கும் நடிகர் ரவி மோகன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவே யோகிபாபுதான். அதனால் இந்த விழாவில் முக்கிய விருந்தினராக அவர் கலந்துக்கொண்டார்.
ஆனால் இந்த விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் பாவனா, நடிகர் யோகிபாபுவை அவமதித்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் யோகி பாபு அமர்ந்திருந்த பார்வையாளர் பகுதிக்கு மைக்குடன் சென்ற தொகுப்பாளர் பாவனா, நீங்கள் எங்கே இருந்தீர்கள் நான் உங்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை. வாங்க மைக்கை எடுங்க கொஞ்சம் எந்திரிச்சு நில்லுங்க ஐயா என்று பேசினார்.
நடிகர் யோகி பாபு எழுந்து நின்ற பிறகு, நாம் கொஞ்சம் மைண்ட் கேம் விளையாடலாமா? உங்க மைண்ட் வாய்ஸ் என்ன சொல்கிறது என்று பாவனா கேட்டார். அதற்கு யோகி பாபு, ரவி சார் ஒரு படம் தயாரிப்பதாக கேள்விப்பட்டேன். அந்த படம் நன்றாக ஓட வேண்டும். அவரது தயாரிப்பு நிறுவனமும் நன்றாக வளர வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர்கள் பேசிய இந்த உரையாடல், இணையத்தில் வைரலான நிலையில் நடிகர் யோகிபாபுவை பாவனா அவமதித்து விட்டார் என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொகுப்பாளர் பாவனா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியதாவது, மக்களே, நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கும் யோகி பாபு க்கும் இடையிலான வேடிக்கையான உரையாடலை பலர் தவறான கோணத்தில் பார்த்து அதை பகிர்ந்து கொள்கிறார்கள்.
யோகிபாபுவும் நானும் இதற்கு முன்பு இப்படி பேசுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? குறிப்பாக ஐபிஎல் காலங்களில் சிஎஸ்கே போட்டியின் போது நாங்கள் மிகவும் வேடிக்கையாக பேச முயற்சித்தோம். ஒரு 30 வினாடி வீடியோவை பார்த்தபிறகு யோகிபாபுவை அவமதித்ததாக பல கதைகளை சொல்கிறார்கள். எனக்கு யோகி பாபுவை நன்றாக தெரியும். நாங்கள் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தோம். சில பயனற்றவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் வெறுப்பை பரப்புகிறார்கள். எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாவனா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





