தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த். சிறந்த மனிதராகவும் அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் அதிக அக்கறை கொண்டவர். தனது பிறந்த நாளை கூட நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரு திருநாளாக மாற்றிக்கொண்டவர்.
மாணவர்களின் கல்வி நலனில் அதீத அக்கறை கொண்ட நடிகர் விஜயகாந்த் கடந்த 2001ம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் 75 ஏக்கர் பரப்பளவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றை துவங்கினார். இந்த பொறியியல் கல்லூரிக்கு தனது பெற்றோர் பெயர்களான ஆண்டாள் அழகர் என பெயரிட்டார். ஏழை மாணவர்களின் இன்ஜினியர் கனவை நிறைவேற்றும் லட்சியத்தில்தான் இந்த கல்லூரியை விஜயகாந்த் உருவாக்கினார்.
இந்த கல்லுாரியில் பொறியியல் படிப்புகளில் சேர அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வாங்க செய்த நடிகர் விஜயகாந்த், அரசு கோட்டாவில் வரும் மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக்கொள்ள அதிக முக்கியத்துவம் தந்தார். கல்வி கட்டணம் செலுத்த முடியாத சில மாணவர்களுக்கு விஜயகாந்தே தனது சொந்த செலவில் அந்த கட்டணங்களையும் கல்லூரிக்கு பல ஆண்டுகளாக செலுத்தி இருக்கிறார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் விஜயகாந்த் படுக்கையில் முடங்கிய போது, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தை விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், மைத்துனர் எல்கே சுதீஷூம் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களால் தேமுதிக கட்சியை போலவே கல்லூரி நிர்வாகத்தையும் திறம்பட நடத்த முடியவில்லை.
இந்த சூழலில் தற்போது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை, தனலட்சுமி சீனிவாசன் என்பவருக்கு ரூ. 150 கோடிக்கு பிரேமலதா விற்பனை செய்துவிட்டார். இந்த தகவலை ஒரு வீடியோவில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உறுதி செய்திருக்கிறார். இது கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களையும் தேமுதிக தொண்டர்களையும் கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
ஏற்கனவே இந்த கல்லூரியின் பெயரில் வங்கி கடன் ரூ. 5 கோடி இருந்த நிலையில், ரூ. 150 கோடிக்கு கல்லூரியை வேறொரு கல்வி நிறுவனத்துக்கு விற்பனை செய்திருக்கிறார் பிரேமலதா. ஏழை எளிய மாணவர்களின் இன்ஜினியர் படிப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் தனது பெற்றோர் பெயரில் ஆரம்பித்த கல்லூரியை, இப்போது ரூ. 150 கோடிக்கு ஆசைப்பட்டு தனது கணவரின் ஆசையை நிராசையாக்கி விட்ட பிரேமலதா மீது கேப்டனின் ரசிகர்கள் பலத்த அதிருப்தியில் உள்ளனர்.





