தமிழ் சினிமாவில் செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இன்று நடந்தது.
இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான் அந்த படங்களை திரையிடுவோம் என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அவர்கள் முடிவு எடுத்துள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் இப்படி ஒரு வழக்கம் நடைமுறையில் இல்லாத போது தமிழகத்தில் மட்டும் அப்படி புகுத்துவது கண்டிக்கத்தக்கது. ஆண்டுக்கு 250 படங்கள் வெளியாகின்றன. இதில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் இந்த முடிவை தயாரிப்பாளர்கள் ஆன எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை கண்டித்து செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் முடிவெடுத்துள்ளோம்.
இதுபற்றி அடுத்தபடியாக தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் தற்போது புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இதை 8 வாரங்களுக்கு பிறகு என்று மாற்றுவதற்கு தயாரிப்பாளர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த பிரச்னை தற்போது ஏற்பட்டுள்ளது.





