எப்போதுமே பிரபலமாக இருப்பவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் அரசியல், சினிமா, விளையாட்டு சார்ந்த பத்திரிகைகள், புத்தகங்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இணையத்திலும் அதுசார்ந்த புதிய தளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக சினிமா மீது அதிக ஆர்வமுள்ள ரசிகர்களுக்கு நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை, அவர்கள் நடித்து வரும் படங்கள் மட்டுமின்றி அவர்களது சொந்த வாழ்க்கை குறித்தும் தெரிந்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை பற்றிய விஷயங்களை ஆர்வமாக தேடி தெரிந்துக் கொள்கின்றனர். அவர்கள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகும் போது அவை வைரலாகின்றன.
அதுவும் சோஷியல் மீடியாவில் நொடிக்கு நொடி புதிய புதிய தகவல்கள் அப்டேட் ஆகி வரும் சூழலில், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் பல கோடி மக்களுக்கு தெரிந்து விடும் அளவுக்கு சோஷியல் மீடியாவின் அசுர வளர்ச்சியும், தொழில்நுட்பமும் இருந்து வருகிறது. இது பல நன்மைகளை செய்தாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தவே செய்கிறது.
கடந்த 2004ம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக்கொண்ட நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2022ம் ஆண்டில் தங்களது பிரிவை, அவரவர் டிவிட்டர் பக்கங்களில் அறிவித்தனர். அதே போல், சமீபத்தில் இசையமைப்பளார் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார், அவரது மனைவி சைந்தவி ஆகியோர் தங்களது பிரிவை தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தனர்.
இப்படி சமூக வலைதளங்களில், பொதுவெளியில் அவர்களது பிரிவு சம்பந்தமான அறிவிப்பை அவர்களே வெளிப்படையாக கூறும்போது அதற்கு சிலர் நேர்மறையான கருத்துகளை பதிவிடுகின்றனர். பெரும்பாலானவர்கள் எதிர்மறையான விமர்சனங்களை பதிவிடுகின்றனர். இதில் அவர்களது சொந்த வாழ்க்கையை விமர்சிக்கும் படியான கருத்துகளும் இடம்பெறுகின்றன. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள், எங்களது சொந்த வாழ்க்கையை விமர்சிக்க நீங்கள் யார் என, ஆவேசமாக பதில் பதிவிடுகின்றனர்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பத்திரிகையாளர் சேகுவார் கூறுகையில், ஜிவி பிரகாஷூம், சைந்தவியும் எங்களது பிரைவசியில் தலையிடாதீர்கள். எங்களது பிரிவு குறித்து விமர்சிக்காதீர்கள் என்று கூறி வருகின்றனர். அப்படி நினைப்பவர்கள், தங்களது திருமண முறிவை ஏன் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும், பர்சனலாக அதை செய்து கொண்டு விட்டால் யாரும் எதுவுமே சொல்லப் போவது இல்லை. பொதுவெளியில், சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டால், பலரும் பேசத்தானே செய்வார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.





