லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். லியோ படத்தின் மீது எப்படி விஜய்யும், அவரது ரசிகர்களும் நம்பிக்கை வைத்திருக்கின்றனரோ அதேபோன்றொரு நம்பிக்கையை தளபதி 68ன் மீதும் வைத்திருக்கின்றனர். ஏனென்றால் வெங்கட் பிரபு அஜித்துக்கு மங்காத்தா என்ற மெகா ஹிட்டை கொடுத்தவர் என்பதுதான் காரணம்.
லியோ படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதே இந்தப் படத்துக்கான பூஜை போடப்படும் என தகவல் வெளியானது. ஆனால் படத்தின் அறிவிப்பு வெளியானதற்கே ரசிகர்களில் பலரும் லியோவை மறந்து தளபதி 68 குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர். இதனால் லியோ பாதிக்கப்பட்டுவிடும் என சுதாரித்துக்கொண்ட விஜய் 68ஆவது படத்துக்கான பூஜை தள்ளி வைத்துவிட்டார்.
அதனையடுத்து வெங்கட் பிரபுவும் தனது உதவி இயக்குநர்களுடன் படத்தின் கதையையும், திரைக்கதையையும் இறுதி செய்யும் பணியில் மும்முரமாக இறங்கினார். சூழல் இப்படி இருக்க அமெரிக்காவுக்கு விஜய் சென்றிருக்கிறார். அங்கு தளபதி 68 படத்துக்காக 3டியில் விஜய்யின் உடல் முழுவதுமாக ஸ்கேன் செய்யப்பட்டது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
இதற்கிடையே படத்தின் கதை சைன்ஸ் பிக்ஷனாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.மேலும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் செண்ட்டிமெண்ட்தான் படத்தின் லைன் என்றும்; இதில் இரண்டு வேடங்களிலுமே விஜய்தான் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. அதேபோல் இதில் ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் வயதான விஜய்க்கு ஜோடியாக நடித்தால் மகன் விஜய்க்கு அம்மா கேரக்டரும் இருக்கும் என்பதால் அதனை ஜோதிகா மறுத்துவிட்டதாகவும்; அவருக்கு பதிலாக சினேகாவை நடிக்க வைக்க திட்டம் தீட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே சினேகா வசீகரா படத்துக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்நிலையில் வசீகரா படத்தின்போது ஒரு தகவல் வெளியானதாக பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “விஜய்யும், சினேகாவும் நடித்த வசீகரா படம் நல்ல படம்தான். அப்போது வரவேற்பை பெறவில்லை என்றாலும் இப்போது அதை ரசிக்கிறார்கள். அந்தப் படத்தில் முதலில் விஜய் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் போயஸ்கார்டனிலிருந்து ஃபோன் செய்து உங்கள் கால்ஷீட் வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். அதற்கு விஜய் நோ சொல்ல சசிகலா கேட்குறாங்க என மிரட்டும் தொனியில் பேசித்தான் விஜய்யை ஒத்துக்கொள்ள வைத்தார்கள் என அப்போதே செய்திகள் வெளியாகின” என கூறினார்.





