நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதியை பொருத்தவரை நல்ல ஆளுமை மிக்க ஒரு கலைஞன். கொடுத்த கேரக்டரில் மிகச் சிறப்பாக நடிக்க கூடிய திறமையான நடிகர். வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர் என்பதால் அவரிடம் ஒரு எளிமையான மனிதனுக்குரிய பண்புகளும், வார்த்தைகளும் வெளிப்படும்.
தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த கலைஞனாக நிரூபித்துக் கொண்டிருப்பவர். விஜய் சேதுபதி துவக்கத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்தார். பிறகு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் கதையின் நாயகன் அந்தஸ்துக்கு வந்தார். தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்களில் நடித்து படிப்படியாக தமிழ் சினிமாவில் தனது வளர்ச்சி பாதையை அமைத்துக் கொண்டார்.
ஒருகட்டத்தில் விஜய் சேதுபதி இல்லாமல், படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய படங்களில் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமின்றி வில்லனாகவும், சில படங்களில் கேமியோ ரோல்களிலும் நடித்து அசத்தியவர். தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் ஜவான் என்ற படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது ட்ரெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டைரக்டர் மிஷ்கின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. விடுதலை 2 படப்பிடிப்பிலும் ட்ரெயின் படப்பிடிப்பிலும் மாறி மாறி கலந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. இவரை பொருத்தவரை படத்தின் ஆரம்பத்தில் படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோவை பாராட்டி பேசுவார். ஆனால் படப்பிடிப்பு நடந்து முடிவடையும் தருவாயில், எப்படியும் இயக்குனர் மீதும் கதாநாயகன் மீதும் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டு விடும். இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது.
ஆனால் இந்த முறை ஆரம்பம் முதலே இறுதிவரை ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகளும், அவரது ஒத்துழைப்பும் படப்பிடிப்பை சுணக்கம் அடையாமல் அவர் கொண்டு சென்ற விதமும் பார்த்து தயாரிப்பாளர் தாணு அசந்து போய் விட்டார். நேரடியாக விஜய் சேதுபதியை அழைத்து பாராட்டிய தயாரிப்பாளர் தாணு, இப்படி நீங்க இருப்பீங்கன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கலை, இந்த படம் மட்டுமல்ல. அடுத்தும் என்னுடைய தயாரிப்பில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு விஜய் சேதுபதியும் சம்மதித்து இருக்கிறார். இந்த தகவல் இப்போது வைரலாகி வருகிறது.





