விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் இதுவரை 460 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. நாளை அந்தப் படத்தின் வெற்றி விழா நடைபெறலாம் என்று கருதப்படுகிறது. இதில் கண்டிப்பாக விஜய் கலந்துகொண்டு குட்டி ஸ்டோரி சொல்வார் என்றும் அவரது அரசியல் எண்ட்ரி குறித்து சூசகமாக தெரிவிப்பார் என்றும் அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
கடந்த சில வருடங்களாகவே விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் அவர் செய்யும் செயல்பாடுகள் அனைத்துமே அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்பதையே உணர்த்துவதாக பலர் கூறுகிறார்கள். மேலும் அவரது ரசிகர்களும் விஜய் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆவார் என்கிற தொனியிலும் திமுக அதிமுகவுக்கு அவரே மாற்று என்கிற தொனியிலும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
குறிப்பாக லியோ படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு அனுமதி கிடைக்காததற்கு காரணமே விஜய்யின் அரசியல் மூவ்தான் என்ற ஒரு கருத்தும் பட ரிலீஸுக்கு முன்னதாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிளான் என்னவாக இருக்கும் என்பது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 170 திட்டங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படுப்ம்போது தமிழ்நாடே பிரமிப்பில் இருக்கும். விஜய்யை ஜோசப் விஜய் என்று ஹெச்.ராஜா பேசியது, மாஸ்டர் ஷூட்டிங்கின்போது அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றது என பாஜக தொடர்ந்து விஜய்க்கு எதிராகவே இருப்பது போன்ற பிம்பம் இருக்கிறது. எனவே அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற எண்ணமும் போயிருக்கிறது.
ஆனால் விஜய் ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டில்தான் அவர் இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தையில் ராகுல் காந்தியும் விஜய்யும் இருக்கிறார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். முக்கியமாக நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்குத்தான் அவர் தனது ஆதரவை தெரிவிக்கும் முடிவிலும் இருக்கிறாராம்.
அதேசமயம் திமுக, அதிமுக கட்சிகளை அவர் எதிர்க்கும்போது எப்படி இந்தியா கூட்டணியில் அவர் இணைவது சாத்தியம் என்ற கேள்வி எழுந்தாலும் அதிலும் அவர் தெளிவாக இருக்கிறார் என்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதியில் மட்டும் விஜய் பிரசாரம் செய்ய வாய்ப்பு அதிகம் இருக்கிறது எனவும் சிலர் சொல்கிறார்கள்” என்றார்.





