தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அவர் இயக்கத்தில் வெளிவந்த ஆரண்ய காண்டம் திரைப்படம், திரையரங்குகளில் வெளியான இரண்டு மூன்று தினங்களிலேயே தூக்கி எறியப்பட்டது. ஆனால் அந்த திரைப்படத்திற்கு, தேசிய விருது கிடைக்க, பலரும் அது என்ன படம் என்று தேட ஆரம்பித்தார்கள். தொடர்ந்து ஆரண்ய காண்டம் குறித்து இணையத்தில் பேசப்பட, அதன் விமர்சனங்கள் நல்ல முறையில் ரீச் ஆனது.
இந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்தான் அருண் மாதேஸ்வரன். இவரது இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் ராக்கி. வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், ரத்தம் தெறிக்க தெறிக்க எடுக்கப்பட்டது. நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்து இருந்தது.
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் திரையரங்குகளில் கல்லா கட்டவில்லை. இதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம் பெற்ற வன்முறை காட்சிகள் தான். குடும்ப ஆடியன்ஸ்களிடம் அது எடுபடாமல் போனதால் ராக்கி படத்தைக் காண பலரும் விரும்பவில்லை. இப்படியான சூழலில் அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனை வைத்து சாணி காயிதம் படத்தை எடுத்தார் அருண் மாதேஸ்வரன்.
சாதாரண பழி வாங்கும் கதையாக, ரத்தம் துடிக்க துடிக்க எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. வன்முறை காட்சிகள் அதிகம் இருந்ததால், இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் தற்போது மூன்றாவது படத்திற்காக அருண் மாதேஸ்வரன் தனுசுடன் இணைந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு கேப்டன் மில்லர் என பெயர் வைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு முந்திய காலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். படத்தில் அருண் மாதேஸ்வரனின் உழைப்பை கவனித்த தனுஷ், அவருடன் இன்னொரு படத்தில் சேர்வதாக அறிவித்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், தனது அடுத்த படம் குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது முதலில், தனது தயாரிப்பிலேயே ஒரு படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறாராம். குறுகிய நாட்களிலேயே இந்த திரைப்படம் எடுக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். இதன் பிறகு மீண்டும் தனுசுடன் இணையும் அவர், வரலாற்று பின்னணி சார்ந்த கதைக்களத்தை கையில் எடுப்பதாக தெரிவித்துள்ளார். பிறகு ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் அருண் மாதேஸ்வரன் கூறியிருக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து மூன்று படங்களில் பிஸியாக இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.





