இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் விஜய் நடித்த ஜனநாயகன் படமும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் பொங்கல் பண்டிகை களத்தில் ஒன்றாக மோதுவது என்பது பெரிய பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு தரப்பினர் விஜய்க்கும் ஒரு தரப்பினர் சிவகார்த்திகேயனுக்கும் ஆதரவான கருத்துகளை கூறி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்குள் வந்து 14 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் விஜய் 33 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் அவர்தான். அதனால் விஜய் நடித்த படம் வெளியாகும் நேரத்தில் சிவகார்த்திகேயன் படம் வெளியாவதை அவரே தடுத்திருக்க வேண்டும் என்றும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது. இதுவே ரஜினி நடித்த படம் அந்த தேதியில் வருகிறது என்றால் சிவகார்த்திகேயன் அவருடன் மோத நினைப்பாரா? கண்டிப்பாக மோத மாட்டார் தானே? ரஜினியை விட விஜய் பெரியவரா என்பதற்குள் நான் போகவில்லை.
ஆனால் ரஜினி கமல் என்பதற்கு எப்படி தமிழ் சினிமாவில் மரியாதை இருக்கிறதோ அதேபோல் அதே மரியாதை சினிமாவில் விஜய்க்கும் ஒரு மரியாதை இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் கொடுக்க வேண்டும் தானே? அதைத்தான் சிவகார்த்திகேயன் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்சனைக்கு காரணம் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் ஒருவேளை வெளியில் இருந்து சிவகார்த்திகேயனை முக்கிய நபர்கள் யாரேனும் இயக்குகிறார்களா? இது பெரிய இடத்து விவகாரம் என்பதால் சிவகார்த்திகேயன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறாரா என்று தெரியவில்லை. எது உண்மையோ அது விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் சமீபத்தில் இதுபற்றி திருப்பூர் சுப்ரமணியன் கூறுகையில், பராசக்தி படம் பூஜை போட்ட போதே பொங்கலுக்கு ரிலீஸ் என்று தெரிவித்து விட்டனர். ஆனால் ஜனநாயகன் படம் தீபாவளிக்கு தான் ரிலீஸ் என்று திட்டமிட்டனர். ஆனால் பொங்கலுக்கு வந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று அவர்கள்தான் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதியை மாற்றினர். அதனால் இது திட்டமிட்ட போட்டியில்லை என்று கூறியிருக்கிறார்.





