மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான விஜய பிரபாகரன் தனது கட்சியில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். அவருக்கு அண்மையில் இளைஞர் அணி பொதுச் செயலாளராக பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இதே போல் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் இறங்கி இருக்கிறார்.
முதல் திரைப்படமான சகாப்தம் பெரிய அளவு பேர் வாங்கவில்லை. பிறகு வெளியான மதுரை வீரன் திரைப்படமும் அந்த அளவு ஜொலிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது படைத்தலைவன் என்னும் திரைப்படத்தின் சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார். யானைகளை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.
இதில் யானைகளுடனே பயணம் ஆகி இருக்கிறார் சண்முக பாண்டியன். இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் கவனிப்பை பெற்றது. விலங்குகள் சம்பந்தப்பட்ட திரைக்கதை என்பதால் நிச்சயம் இந்த திரைப்படம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படைத்தலைவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் கஸ்தூரிராஜா சசிகுமார் ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சண்முக பாண்டியன் தாயாரும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஏ ஆர் முருகதாஸ், கேப்டன் உடனான பல தருணங்களை நினைவு கூர்ந்தார். எந்த ஊர் காட்சிக்கும் அவர் டூப் போடாமல் நடிப்பார் என்றும் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய முருகதாஸ், ரெட் ஹில்ஸ் பகுதியில் ரமணா திரைப்படத்தின் சூட்டிங் நடந்தபோது ஒரே ஒரு கேரவனை வரவழைத்து விட்டேன். அதற்கு விஜயகாந்த் மிகவும் கோபப்பட்டார். கேரவன் இல்லாமல் படப்பிடிப்பில் இருக்கும் அனைவருடனும் சகஜமாக பழகுவார்.
இப்போது அவரது மகனான சண்முக பாண்டியன் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். அவரை நாம் தான் வரவேற்க வேண்டும். வளர்ந்து வாருங்கள். ரமணா 2 எடுப்போம். திரும்ப நம்ம கேப்டனை காட்டுவோம் என்று பேசினார். உடனே அரங்கமே எழுந்து கைதட்ட, அதனைத் தானே தயாரிப்பதாக தெரிவித்தார் எல்கே சுதீஷ். இதைக் கேட்டு விஜயகாந்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.





